உக்ரேனுக்கு இராணுவ உதவிகளை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டிகள் வெடித்து சிதறின.
உக்ரேன் இராணுவத்துக்கு தேவையான இராணுவ உதவிகளை ஏற்றிச் சென்ற மூன்று ட்ரக் வண்டிகள் போலந்தில் வெடித்து சிதறியுள்ளன. குறித்த வாகனங்கள் போலந்து விமானப்படை தளத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை, இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வெடிப்புகள் நீடித்ததாக அருகில் உள்ள கிராம மக்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அந்நாட்டில் உள்ள அமெரிக்க கொன்சல் காரியாலய பிரதானியை அமைச்சிற்கு அழைத்துள்ளார். ரஷ்ய எல்லையை கடக்கும் வெளிநாட்டு கூலிப்படைகள் ரஷ்யாவிற்கு கட்டாய இலக்காக மாறியுள்ளதாக அதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
ரஷ்யாவின் கர்ஸ் பகுதிக்குள் நுழைந்த உக்ரேன் இராணுவத்துடன், மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களும் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளமையே இதற்கான காரணமாகும்.
கர்ஸ் பிராந்தியத்தில் உக்ரேன் தாக்குதல் நடத்தினாலும், டான்பாஸ் பகுதியில் ரஷ்ய இராணுவம் முன்னேறி வருவதாக வொஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
ரஷ்ய எல்லைப் பகுதியில் உக்ரேன் தாக்குதல் நடத்தி ஓரளவு வெற்றி பெற்ற போதிலும், கிழக்கு உக்ரேனில் ரஷ்யா முன்னேற்றிச் செல்வதை தடுக்க முடியவில்லை என அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
டொனெட்ஸ் பிராந்தியத்தின் முக்கியமான மூலோபாய கிராமங்களை ரஷ்ய துருப்புக்கள் நெருங்கி வருகின்றன. உக்ரேனின் மூலோபாய திட்டங்களில் குறைபாடுகள் உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பிற்கான மத்திய நிலையத்தின் ஆய்வாளர் ஃபிரான்ஸ் ஸ்டீபன் குற்றம் சாட்டியுள்ளார்.