உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு மீண்டும் நினைவூட்டல்
உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 14 உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் மாத்திரமே ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த அரசாங்கத்தின் போது 28 அமைச்சர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டன.
அவற்றை ஒப்படைக்கும் போது, நிலுவையில் உள்ள மின்சாரம் மற்றும் நீர்க் கட்டணங்களையும் கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்து கட்டணங்களையும் செலுத்திய பின்னரே உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதனை மீறும் முன்னாள் அமைச்சர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.