உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் அடுத்த மாதம் 2ஆம் திகதி தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என தேசிய தேர்தல்; ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 8ஆம் திகதி உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே, 71 லட்சத்துக்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலின் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கும் தேர்தல் பிரசார செலவு அறிக்கையில், சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு நன்கொடை அல்லது பங்களிப்பு செய்த நபர்களின் PIN இலக்கம் அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கத்தை குறிப்பிட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான 21 நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் தேர்தல் பிரசார செலவுகள் உள்ளிட்ட செலவு அறிக்கையை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். செலவினங்கள் தொடர்பான தவறான தகவல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டால், பதவி மாத்திரமன்றி, அவரது பிரஜாவுரிமையும் மூன்று வருடங்களுக்கு ரத்து செய்யப்படும்.