உரமானியத்தை 25 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கத் தீர்மானம்.
அபிவிருத்திக் கொள்கை நிதி மயமாக்கல் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 20 கோடி அமெரிக்க டொலர்கள் கிடைக்கவிருப்பதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அவர் இது பற்றிக் கருத்து வெளியிட்டார்.
விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு ஹெக்டயருக்கு 25 ஆயிரம் ரூபா பெறுமதியான உரமானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபா மாத்திரமே மானியமாக வழங்கப்படுகிறது. நெல் ஆலை உரிமையாளர்களுக்கு உயர்ந்த பட்சம் 600 கோடி ரூபா வரையிலான நெல் கொள்வனவை மேற்கொள்ள வங்கிகளின் மூலம் கடன் உதவிகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இலங்கையில் உள்ள ஆதிவாசிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான சட்டத்தை நிறைவேற்றவும் அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.