Home » ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல்

ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல்

Source

படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நிமலராஜனின் திருவுருவப் படத்திற்கு முதலில் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான பெடி கமகே ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தென்னிலங்கை ஊடகவியலாளர் அஜித் பொது சுடரேற்றி அஞ்சலியை ஆரம்பித்து வைத்தார். பின்னர், யாழ். ஊடக அமையத்தைச் சேர்ந்த ஏனைய ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.


போர்ச் சூழலில் யாழ்ப்பாணத்தில் இருந்து துணிச்சலுடன் தமது ஊடகப் பணியை ஆற்றியவர் நிமலராஜன். இவர் பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை, வீரகேசரி, ராவய உள்ளிட்ட பல முன்னணி ஊடகங்களில் பணியாற்றி வந்தார்.

கடந்த 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தவேளை, ஆயுததாரிகள் அவரது வீட்டு வளவினுள் அத்துமீறி நுழைந்தனர். வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் நிமலராஜன் அதே இடத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

அவர் கடைசியாக எழுதிக்கொண்டிருந்த கட்டுரையின் மீதே விழுந்து உயிர் துறந்தார் என்ற துயரச் செய்தி குறிப்பிடத்தக்கது. கொலையாளிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், வீட்டின் மீது கைக் குண்டுத் தாக்குதல் நடத்தியதில், நிமலராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம், தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்தனர்.


இந்த கொடூரமான படுகொலை சம்பவம் இடம்பெற்று 25 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இதுவரை குற்றவாளிகள் எவரும் கண்டறியப்படவோ அல்லது நீதியின் முன் நிறுத்தப்படவோ இல்லை.

ஊடகவியலாளர் நிமலராஜனின் கொலைக்கு நீதி கோரி யாழ். ஊடக அமையம் உள்ளிட்ட பல்வேறு சிவில் மற்றும் ஊடக அமைப்புகள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நினைவேந்தல் நிகழ்வு, இலங்கையில் ஊடக சுதந்திரம் மற்றும் நீதி நிலைநாட்டப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்தது.

The post ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image