Home » எதிராளிகளின் கருத்துக்களை ஒரே நிலைப்பாடாகப் பதிவு செய்து வழக்கை முடிவுறுத்த தமிழரசுக் கட்சி தீர்மானம்!

எதிராளிகளின் கருத்துக்களை ஒரே நிலைப்பாடாகப் பதிவு செய்து வழக்கை முடிவுறுத்த தமிழரசுக் கட்சி தீர்மானம்!

Source

இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரினதும் மறுமொழியையும் ஒரு நிலைப்பாடாகப் பதிவு செய்து வழக்கை தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய கூட்டம் நேற்று வவுனியா, இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வழக்கு தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பான விளக்கம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. கடந்த தவணையில் எதிராளிகளாகப் பெயரிடப்பட்ட ஏழு பேருடன் கிளிநொச்சியைச் சேர்ந்த ஜீவராஜா என்பவர் தன்னையும் இணைத்துக்கொள்ளுமாறு விண்ணப்பம் செய்திருந்தார்.

அவரது விண்ணப்பம் தொடர்பாக ஆட்சேபனைகள் இருப்பின், அந்த ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்காகக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் யோகேஸ்வரன் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி அவகாசம் வழங்குமாறு தவணை கேட்டிருந்தார். நானும் அப்படிக் கேட்டிருக்கின்றேன். அதனையடுத்து எதிர்வரும் ஜூலை 19 ஆம் திகதிக்கு வழக்கு அழைக்கப்படவுள்ளது.

அந்தவகையில் கடந்த தவணைக்கு முன்பாக கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கமைய வழக்கை முடிவுறுத்திக் கொள்வது தொடர்பாக நீதிமன்றிலே நான் கூறியிருக்கின்றேன். எதிராளிகள் முன்வைத்துள்ள ஆட்சேபனைகள் தொடர்பாக வழக்காளி தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற காரணத்துக்காகவே கடந்த தவணை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதுபோன்ற சிவில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும்போது அதில் பல படிமுறைகள் உள்ளன. அவற்றை கடந்த பின்னரே வழக்கு விசாரணைக்கு நியமிக்கப்படலாம். சாதரணமாக இவ்வாறான வழக்கில் ஒரு வருடத்துக்குப் பின்னரே முதலாவது விளக்கத்துக்கான திகதி குறிக்கப்படும். ஆனால், இந்த வழக்கில் வழக்கை முடிவுறுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக நாங்கள் குறுகிய தினத்தைக் கேட்டிருக்கின்றோம்.

அன்றைய தினம் வழக்காளி நீதிமன்றிலே தெரிவித்த விடயத்துடன், எதிராளிகள் ஏழு பேரும் அழைத்திருக்கின்ற ஆட்சேபனைகளின் அடிப்படையில் மூன்று வித்தியாசமான நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக நானும் கட்சியின் பொதுச்செயலாளரும், நிர்வாகச் செயலாளரும் ஒரு நிலைப்பாட்டையும், மாவை சேனாதிராஜா மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் வேறொரு நிலைப்பாட்டையும், சிறீதரன், குகதாசன் ஆகியோர் இன்னொரு நிலைப்பாட்டையும் எடுத்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் கட்சி ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுக்காத சூழ்நிலையில் நாங்கள் எப்படி எமது நிலைப்பாட்டை இதற்குத் தெரியப்படுத்துவது என்று அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இருப்பினும் கட்சி தற்போது ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது. வழக்காளி கோரும் நிவாரணங்களை வழங்கி தெரிவுகளை மீள நடத்துவதற்குத் தான் இணங்குகின்றார் என்று சிறீதரன் கூறியிருந்தார். அதனை நீதிமன்றில் நானும் சொல்லியிருக்கின்றேன்.

இப்போது நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ள காரணத்தால் நாங்கள் ஏழு பேரும், எட்டாவது எதிராளியான இரத்தினவடிவேலும் இணைந்து, வழக்கிலே எமது மறுமொழியை ஒரு நிலைப்பாடாகப் பதிவு செய்து வழக்கை முடிவுறுத்துவதற்காக வழக்காளியோடு இணக்கப்பாட்டுக்கு வருகின்றோம் என்று கூறி வழக்கை முடிவுறுத்துவதற்குத் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்காக வழக்காளியின் சட்டத்தரணியோடு நான் பேசியிருக்கின்றேன். ஏனையவர்களின் சட்டத்தரணிகளுடன் பேசி பொது நிலைப்பாட்டுக்கு இணங்கிக்கொள்வதுடன், எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி வவுனியாவில் மத்திய செயற்குழு மீண்டும் கூடி அந்த மறுமொழியின் வரைபை மத்திய செயற்குழுவுக்குச் சமர்ப்பித்து அதன் அங்கீகாரத்தைப் பெறவேண்டும்.

அதனை அடுத்த தவணையில் நீதிமன்றில் சமர்ப்பித்து அதன் பின்னர் எமது இணக்கப்பாட்டைச் செய்யலாம் என்று தீர்மானித்திருக்கின்றோம்.” – என்றார்.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி.தவராசா உட்பட மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image