எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரி 100 மில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளது. இந்த நிலையில் திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் பெப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
அந்த மூன்று நாட்களிலும் யாரேனும் தபால் மூலமான வாக்களிக்க முடியாமல் போனால், 28ஆம் திகதி மாவட்ட தேர்தல் அத்தியட்சகர் முன்னிலையில் செலுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்வதில் தங்களுக்கு சட்டத் தடைகள் எதுவும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே அறிவிக்கப்பட்டபடி திகதியில் தேர்தலை நடத்த ஆணைக்குழுவும் மற்ற தேர்தல் செயலக அதிகாரிகளும் பணியாற்றி வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசியல் கட்சிச் செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இடையிலான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் உள்ள சவால்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.