கடவுச்சீட்டுக்களை வழங்கும் நடவடிக்கை திங்கட்கிழமை முதல் வழமைக்கு!
வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்புமென்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அத்தியாவசிய தேவைகளைக் கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்காக அச்சிடும் நிறுவனம் இதுவரை 7 இலட்சத்து 50 ஆயிரம் கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கட்டம் கட்டமாக இலங்கைக்கு உரிய கடவுச்சீட்டுக்கள் கிடைக்கவிருக்கின்றன. முதலாவது பகுதி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு கிடைக்க இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் விஜித ஹேரத் இது பற்றி கருத்து வெளியிட்டார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க அரசாங்கம் கட்டுப்பட்டிருப்பதாக அமைச்சர் வலியுறுத்தினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகள் இருக்குமாயின் அவற்றை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பது அவசியமாகும்.
இதற்குப் பதிலாக உரிய அறிக்கைகளை தம்வசம் வைத்திருப்பது பாரிய குற்றமாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்க மாட்டாது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் இதன்போது வலியுறுத்தினார்.
உரிய காலப்பகுதியில் மத்திய வங்கி ஆளுனராக பணியாற்றிய அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவர எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.