காசாவில் போர்நிறுத்தத்தை அமுற்படுத்துமாறு கனேடிய பிரதமர் கோரிக்கை.
காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, எகிப்து, கட்டார் ஆகிய நாடுகள் முன்மொழிந்துள்ள யோசனைகளின் மூலம் இந்த இலக்கை அடைந்துகொள்ள முடியும்.
காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி, பணயக் கைதிகள் விவகாரம், சமாதானத்தை ஏற்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளுக்கு கனேடிய அரசாங்கம் உயர்ந்த பட்ச ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று பிரதமர் ஜஸ்ரின் ரூடோ சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.
காசாவில் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று எகிப்து, அமெரிக்கா, கத்தார் ஆகிய நாடுகள் கூட்டாக விடுத்திருந்த கோரிக்கையை அடுத்து, பிரதமர் ஜஸ்ரின் ரூடோவின் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.
இந்த மூன்று நாடுகளின் தீர்மானத்தை சவுதி அரேபியா அரசாங்கமும் வரவேற்றுள்ளது. காசாவில் போர்நிறுத்தத்தை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.