காஸாவில் சிக்கியிருந்த 11 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக காஸா பகுதியில் சிக்கியிருந்த நிலையில், எகிப்தின் ரஃபா நுழைவாயில் ஊடாக வெளியேறிய 11 இலங்கையர்களும் நாடு திரும்பியுள்ளனர்.
கட்டாரின் தோஹாவில் இருந்து விமானம் மூலம் இன்று (05) அதிகாலை குறித்த அனைவரும் நாடு திரும்பியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஸாவில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் கடந்த 3ஆம் திகதி எகிப்துக்கு வந்ததாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகம் தெரிவித்திருந்தது.
அவர்கள் அனைவரும் ரஃபா நுழைவாயில் வழியாக எகிப்துக்கு வந்து எகிப்தில் உள்ள ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
17 இலங்கையர்கள் காஸா பகுதியில் சிக்கியிருந்த நிலையில், அவர்களில் நால்வர் பாதுகாப்பின்மை காரணமாக அங்கிருந்து வெளியேற முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஹமாஸின் தாக்குதல் காரணமாக இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் ஏழாம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அனுலா ஜயத்திலக்க என்ற பெண் உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து ஹமாஸால் பணையக்கைதியாக பிடிக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவரும் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.