தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெளியேறினாலும், கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தனே தொடர்ந்து செயற்படுவார் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ரெலோவின் பேச்சாளர் எனச் சொல்லப்படும் சுரேன் குருசாமி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் சம்பந்தன் தற்போது இல்லை எனவும், அந்தப் பதவி செயலற்றுப் போய்விட்டது என்றும், சம்பந்தனின் தலைவர் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது எனவும் ஊடகங்கள் முன்னிலையில் கூறியுள்ளார்.
கூட்டமைப்பிலிருந்து பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்னமும் வெளியேறவில்லை. ஆனால், கூட்டமைப்பில் பங்காளிக் கட்சிகளாக இருந்த இரண்டு கட்சிகள் (ரெலோ, புளொட்) கூட்டமைப்பிலிருந்து வெளியேறி புதிய கூட்டணியை அமைத்துள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் (ரெலோ, புளொட்) காலகாலமாகக் கூட்டமைப்புடன் உரசிக் கொண்டிருந்தன. தற்போது உள்ளூராட்சிசபைத் தேர்தலையொட்டி அந்த இரண்டு கட்சியினரும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிவிட்டார்கள். அது அவர்களுடைய உரிமை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும் சம்பந்தனே தற்போதும் பதவி வகிக்கின்றார். அதுதான் உண்மை. ஊடக அறிக்கை மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது எனக் கூற முடியாது.
விரும்பினால் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடி அவரைப் பதவியிலிருந்து நீக்கலாம். அல்லது அவர் விரும்பினால் தாமாகவே பதவியிலிருந்து விலகலாம். அதைவிடுத்துக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது எனச் சொல்வது நீண்ட வரலாற்றைக் கொண்டு ஒரு தலைவரை அவமதிக்கின்ற ஒரு கூற்றாகும். அதை நான் கடுமையாக ஆட்சேபிக்கின்றேன்’ – என்றார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து – தனித்துப்போட்டியிடும் முடிவை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவே எடுத்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
TL