மட்டக்களப்பு – கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கனகரெத்தினம் கமலநேசன் 4 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று (24) காலை தவிசாளர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது இடம்பெற்ற பகிரங்க வாக்கெடுப்பின்போது இவர் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி ஆணையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.
இன்றைய அமர்வில் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 23 உறுப்பினர்கள் மண்டபத்தில் சமூகமளித்திருந்தனர். இதன்போது கூட்டத்திற்கு தேவையான நிறைவெண் இருப்பதனால் கூட்டத்தை தொடர்ந்து நடாத்துவதற்கு உள்ளுராட்சி ஆணையாளர் அறிவித்ததோடு தவிசாளருக்கான முன்மொழிவுகளை கோரினார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் கா.நடராசா தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் க.கமலநேசன் ஆகிய இருவரும் தவிசாளர் பதவிக்காக முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டனர்.
இதன்போது நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட க.கமலநேசன் என்பருக்கு 12 வாக்குகளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் முன்மொழியப்பட்ட கா.நடராசா என்பருக்கு 8 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
சிறிலங்கா முஸ்லிம்ஸ் காங்கிரஸ் கட்சியின் 2 பேரும் ஜக்கிய தேசிய கட்சியில் 01 வரும் என 3 பேர் நடு நிலை வகித்தனர்.
கோறளைப்பற்று பிரதேச சபையானது கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆளுகைக்குள் இருந்து வந்தது. கடந்த 29.01.2022 ஆம் திகதியன்று நடைபெற்ற இரண்டாவது வரவு செலவு திட்டம் தொடர்பான சபை அமர்வின் போது தவிசாளரினால் சமர்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோல்வியடைந்ததினால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் தவிசாளராக இருந்த திருமதி சோபா ஜெயரஞ்சித் என்பரது தவிசாளர் பதவியானது வரிதாக்கப்பட்டது.
இன்றைய கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் எஸ்.பிரகாஸ், கிழக்கு மாகாண ஆய்வு உத்தியோகஸ்த்தர் என்.ஜங்கரன் ஆகியோர்கள் நிர்வாக உத்தியோகஸ்த்தர்களாக கடமையாற்றினார்கள்.
AR