சட்டவிரோத குடியேற்றவாசிகளால் பலஸ்தீனின் மேற்குக் கரை வாசிகள் நெருக்கடியில்
இஸ்ரேலில் உள்ள தீவிரவாத சிந்தனைகொண்ட குடியேற்றவாசிகளால் மேற்குக் கரையில் வசிக்கும் பலஸ்தீனர்களுக்கு பாரிய அநீதிகள் இழைக்கப்பட்டு வருவதாக பிபிசி உலக சேவை செய்திவெளியிட்டுள்ளது.
காசாவில் இடம்பெறும் யுத்தத்தைக் காரணம்காட்டி பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான காணிகளை இஸ்ரேலில் உள்ள தீவிரவாத சிந்தனைகொண்ட குடியேற்றவாசிகள் அபகரித்து வருவதாகவும் பிபிசி உலக சேவை மேற்கொண்ட ஆய்வில் இருந்து தெரியவந்திருக்கின்றது.
யுனெஸ்கோ அமைப்பின் உலக மரபுரிமைச் சொத்தாகக் கருதப்படும் பசீர் என்ற் நகரில் இருந்து பெரும்பாலான பலஸ்தீனர்களை இஸ்ரேல் குடியேற்றவாசிகள் விரட்டியடித்து வருவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ள நிலையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
காசாவில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடியைப் போன்றே மேற்குக் கரை வாசிகள் இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றவாசிகளால் பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.