சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கத் தீர்மானித்துள்ள கடன் வசதிகள் பற்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றவுள்ளார். இது தொடர்பான இணக்கப்பாட்டு ஒப்பந்தமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் சான்றிதழை பெற்றுக்கொள்ள முடிந்தமை இலங்கைக்கு கிடைத்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும். நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களில் இருந்து மீள்வதற்கு இது வாய்ப்பாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பாக எடுத்த தீர்மானம் பற்றி மகிழ்ச்சியடைவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். இதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தைப் பாராட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கட்சி பேதமின்றி அரசியல் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது அவசியம் என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் வழங்கிய கடன் உதவியை முறையாக முகாமைத்துவம் செய்து நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.