சலுகைகளுடனான வரிக்கொள்கை அறிமுகப்படுத்தப்படும் – அனுர குமார
சுதந்திரத்தின் பின்னரான கடந்த 76 வருடங்களாக நாட்டை ஆட்சிசெய்த ஆட்சியாளர்களின் தூரநோக்கற்ற செயற்பாடுகளினால் இலங்கை பாதாளத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுமக்களே அதன் விளைவுகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய பொருளாதாரக் கொள்கை, புதிய அரசியல் இலக்கு என்பனவற்றுடன் கூடிய நாடு ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
குருநாகல் வாரியபொல நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இது பற்றிக் கருத்து வெளியிட்டார்.
கைத்தொழில் துறையை மேம்படுத்தி, மக்களுக்குத் தேவையான உணவு வகைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான பின்புலம் உருவாக்கப்பட இருக்கின்றது. அனைவருக்கும் சலுகைகளை வழங்கக்கூடிய வரிக்கொள்கையை உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.