சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புகளுக்கான வட்டி 10 வீதத்தினால் அதிகரிப்பு.
சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புக்களுக்கு வழங்கிய விசேட வட்டி வீதம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, 60 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் அதிக பட்சமாக ஒரு மில்லியன் ரூபா வரையான நிலையான வைப்புக்களுக்கு வழங்கும் வருடாந்த வட்டி வீதம், பத்து வீதத்தினால் அதிகரிக்கப்படும்.
இதனை இரண்டு வருடங்களுக்கு நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் நிலவும் ஓய்வூதிய சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை மேற்கொண்ட பல்வேறு கொள்கை ரீதியான தீர்மானங்களினால் சில ஓய்வூதிய குழுக்களுக்கு ஓய்வூதியத்தில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, 2016 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து 2022 ஜனவரி முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் ஓய்வூபெற்ற அரச ஊழியர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது.
அந்த சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, கடனைச் செலுத்துவதற்கு தேசிய நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
திட்டமிட்ட வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நிகழ்ச்சி நிரல் அடுத்த வருடத்தில் இருந்து அமுற்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.