சிறு கடற்றொழிலாளர்களை பாதுகாத்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்கு தன்னால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்வதேச அமைப்புக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் சிறு கடற்றொழிலாளர்களை பாதுகாப்பது தொடர்பான ஆய்வு அறிக்கையின் அறிமுக நிகழ்வில் உரையாற்றிபோதே கடற்றொழில் அமைச்சரினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
தேசிய மீனவர் ஒற்றுமை அமைப்பு, உலகளாவிய மூலோபாய வரைபிற்கான ஆலோசனைக் குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புக்களின் முயற்சியால் தயாரிக்கப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையின் அறிமுக நிகழ்வு இன்று (06.04.2023) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் காணொளி ஊடாக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இலங்கையில் சுமார் 200,000 சிறு கடற்றொழிலாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கும் வாழ்கைத்தரத்தை உயர்த்துவதற்கும் கடற்றொழில் அமைச்சு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து சட்டவிரோத தொழிலான இழுவைமடி வலைத் தொழிலை மேற்கொள்வதால் இலங்கையின் சிறுதொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக வருத்தம் வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்தை சுமூகமாக தீர்ப்பதற்கு இராஜதந்திர ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், கலந்துரையாடல்கள் மூலமும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், தன்னுடைய முயற்சிகளுக்கு சர்வதேச அமைப்புக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
N.S