சீன வேலைத்திட்டங்களில் இலங்கையருக்கு முன்னுரிமை
நாட்டில் கடந்த சில வருடங்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சீன அபிவிருத்தித் திட்டங்களில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு அதிகளவில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
சீனாவின் Belt and Road திட்டத்தின் ஊடாக நிதியளிக்கப்பட்ட குறித்த திட்டமானது கட்டுமானம், போக்குவரத்து மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தத் திட்டங்கள் ஒருபுறம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்கின்ற போதிலும், மறுபுறம் இதில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் இறுக்கமான விதிமுறைகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இலங்கைத் தொழிலாளர்கள் சீனத் தொழிலாளர்களுடன் ஒப்பிடும் போது குறைந்த அளவிலான ஊதியத்தை பெறுவதாக குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், குறைந்தளவான சலுகைகளை அனுபவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பணியிடங்களில் முதன்மை மொழியாக சீன மொழி பயன்படுத்தப்படுவதன் காரணமாக இலங்கைத் தொழிலாளர்கள் தகவல் தொடர்பாடலில் தடையினை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த நிலையில், தொழிலாளர்களுக்கு பல தவறான புரிதல்கள் மற்றும் பிரச்சினைகள் எழுவதாக கூறப்படுகிறது.