சீரற்ற காலநிலை காரணமாக 13 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாதிப்பு
சீரற்ற காலநிலை காலநிலை காரணமாக 13 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
57 பிரதேச செயலக பிரிவுகளில் 30 ஆயிரத்து 17 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன. 235 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 80 பாதுகாப்பு நிலையங்களில் ஆயிரத்து 717 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 876 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தனகலு ஓயாவிற்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இது குறித்து அவதானமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், வீதிகளில் வாகனங்களை கவனமாக செலுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களம் சாரதிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
அதேவேளை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் 5 மாவட்டங்களில் உள்ள 23 பிரதேச செயலகங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கொழும்பு, காலி, களுத்தறை, கம்பஹா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.