Home » சீரற்ற காலநிலை குறித்து அபாய எச்சரிக்கை!

சீரற்ற காலநிலை குறித்து அபாய எச்சரிக்கை!

Source

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் நாட்களில் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேற்கு, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காலி முதல் மாத்தறை – ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் இந்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் காணப்படும்.

எனவே, மறு அறிவித்தல் வரை அந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

13 மாவட்டங்கள் பாதிப்பு:

13 மாவட்டங்களின் 57 பிரதேச செயலகப் பிரிவுகளில் 30 ஆயிரத்து 17 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன. 235 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

80 பாதுகாப்பு நிலையங்களில் ஆயிரத்து 717 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 876 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் 5 மாவட்டங்களில் உள்ள 23 பிரதேச செயலகங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கொழும்பு, காலி, களுத்தறை, கம்பஹா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

அத்தனகலு ஓயாவிற்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இது குறித்து அவதானமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது கவனமாக செலுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களம் சாரதிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்தனகலு ஓயா, களனி, களு மற்றும் ஜின்கங்கை ஆகிய ஆற்றுப் பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகவில்லை என திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். பி. சி. சுகீஸ்வர எமது நிலையத்திற்கு தெரிவித்தார்.

களனி மற்றும் களுகங்கை ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை படிப்படியாக குறைவடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.

பண்டாரகம, அகலவத்தை, வலல்லாவிட்ட, புளத்சிங்கள, மில்லெனிய மற்றும் மதுராவல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, கம்பஹா, ஜாஎல சந்திக்கு அருகில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், கனரக வாகனங்களுக்கு மாத்திரம் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

கம்பஹா -யக்கல வீதியும், கம்பஹா – ஹங்வெல்ல வீதியின் கரால சந்தியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹிரான் திலகரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முப்படைகளும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி அலுவலகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

களுத்துரை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 4 சிறப்பு மீட்புக் குழுக்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, களுத்துரை கடற்படையின் உடனடி நடவடிக்கை பிரிவும் அதற்கு தயாராகி வருகிறது.

அவசர நிலையின் போது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அத்துடன் 0112 -136 13 6 அல்லது 0112 -136 222 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளைச் செய்யலாம்.

மழையுடனான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்காக 5 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மேலதிக செயலாளர் கே. ஜி. தர்மதிலக எமது நிலயைத்திற்கு தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் ஒருவரின் மரணத்திற்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். அதுமட்டுமின்றி சேதமடைந்த வீடுகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மழையுடனான காலநிலையினால் நாட்டில் மீண்டும் டெங்கு தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image