ஜனவரி 27, 28ஆம் திகதிகளில் தமிழரசுக் கட்சியின் மாநாடு
இலங்கை தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜனவரி 27, 28ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கு ஒருவாரம் முன்னதாக 21ஆம் திகதி கட்சியின் பதவி நிலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் நேற்றையதினம் முற்பகல் 11மணிக்கு வவுனியாவில் உள்ள சுற்றுலா ஓய்வு விடுதியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றிருக்கவில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசனின் தாயாரின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றதன் காரணமாக அவர்கள் குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லை.
இந்நிலையில் குறித்த கூட்டம் சம்பந்தமாக, அக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் வருடாந்த மாநாட்டிற்கான திகதியை தீர்மானிப்பதை மையப்படுத்தியே நடைபெற்றிருந்தது. இதன்போது, கட்சியின் கட்டமைப்புக்கள் மற்றும் கிளைகள் அமைப்பு உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கவனத்தில் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கட்சியின் மாநாட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் 27,28ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த தினத்துக்கு ஒருவாரகாலத்துக்கு முன்னதாக அதாவது 21ஆம் திகதி கட்சியின் பதவிநிலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேநேரம், கட்சியின் மாநாட்டுக்கான தினம் மற்றும் தீர்மானங்களின் உள்ளடக்கங்கள் தொடர்பில் மீண்டும் மத்திய குழு கூடித் தீர்மானம் எடுக்கவுள்ளது என்றார்.
இதேவேளை, மேற்படி மத்தியசெயற்குழு கூட்டத்தின்போது, வவுனியாவைச் சேர்ந்த சேனாதிராஜா என்ற உறுப்பினர், இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்பது தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான விளக்கத்தை வழங்குமாறு கோரினார். அதன்போது கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவும் அதற்கான விளக்கத்தை வழங்குமாறு சுமந்திரனை கோரினார். இதனையடுத்து சுமந்திரன் நீண்டவிளக்கமொன்றை வழங்கியிருந்தார். குறித்த விளக்கத்தில் அவர் தெரிவித்ததாவது, 2010ஆம் ஆண்டுக்கு முன்னதாக என்னை அரசியலில் ஈடுமாறு இரண்டு தடவைகள் சம்பந்தனும், சேனாதிராஜாவும் வலிந்து அழைத்தபோதும் அதனை நிராகரித்த நிலையில் மீண்டும் 2010ஆண்டு தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்புரிமையைப் வழங்கு அரசியலுக்கு அவ்விருவருமே அழைத்து வந்தனர். அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு தேர்தல் அரசியலுக்கான களத்தினையும் அவர்களே ஏற்படுத்தினார்கள்.
தொடர்ந்து சம்பந்தன், தேர்தல் அரசியலுக்கு விடைகொடுக்கும் தீர்மானத்தினை எடுத்தார். அதேநேரம் சேனாதிராஜாவும் வடக்கு முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்தார். அச்சமயத்தில் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 26ஆம் திகதியன்று சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது, சம்பந்தன், சேனாதிராஜாவின் முடிவுகளை மையப்படுத்தி என்னால் தொடர்சியாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடமுடியாது. ஆகவே அரசியல் செயற்பாடுகளில் இருந்து வெளியேறுகின்றேன் என்ற முடிவினை அறிவித்தேன். எனினும், சம்பந்தனும். சேனாதிராஜாவும் அதனை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.
பின்னர், திருகோணமலையில் சம்பந்தனின் முடிவினை அறிக்கும் கூட்டமொன்று நடத்தப்பட்டது. அதன்போது சம்பந்தன் தனது முடிவினை அறிவித்தபோதும், திருகோணமலை மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சம்பந்தன் தனது முடிவினை மீள் பரிசீலனை செய்தார். அதன்போது இரண்டு நிபந்தனைகளை விதித்தார். அதில் முதலாவது, கட்சியின் முதலாவது தேசியப்பட்டியலை குகதாசனுக்கு வழங்குதெனவும், இரண்டாவதாக தான் ஒருவருடத்துக்கே பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பேன் என்பதுமாகும். அதற்கு மேல் தன்னுடைய உடல்நிலை அதற்கு இடமளிக்காது என்றும் குறிப்பிட்டார்.
அதன்பின்னர், வவுனியாலில் நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் திருகோணமலை விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டபோது சம்பந்தனின் நிபந்தனை சம்பந்தமான விடயம் பேசுபொருளாகியது. அச்சமயத்தில் மத்தியகுழு சம்பந்தனுடன் நேரில் குறித்த விடயம் சம்பந்தமாக பேசுதென தீர்மானித்தது. அதன்போது நானும்,சேனாதிராஜாவும் நேரில் சென்று விடயங்களை பகிர்ந்தபோது, சம்பந்தன் மக்கள் தனது நிலைமைகளை அறிந்தே தன்னை தெரிவு செய்ததாக சுட்டிக்காட்டி பதவியிலிருந்து விலகும் தீர்மானத்தை மறுதலித்தார்.
இந்த நிலையில் தான் ஆங்கிலமொழியிலான தொலைக்காட்சி கலந்துரையாடலொன்றுக்கு நான் அழைக்கப்பட்டேன். அந்த கலந்துரையாடலானது, பிழையான இடங்களில் ஊழல்களை தேடுகின்றோமா என்ற தலைப்பில் நடைபெற்றது. அதன்போது தான் தகவலறியும் உரிமைச்சட்டத்துக்கு அமைவாக பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் வினா தொடுக்கப்பட்டது. அந்த வினாவுக்கு பதிலளிக்கும் போது தான் நான் அவரின் பதவி விலகலை குறிப்பிட்டேன்.
அதுவொரு இக்கட்டான வினாவாகும். உண்மையில், பாராளுமன்றத்துக்கு வெறுமனே 39 நாட்கள் வருகை தந்தமைக்காகவும், திருகோணமலையிலிருந்து வருகை தருவதாக போக்குவரத்து கட்டணங்கள் வழங்கப்படுகின்றமை தொடர்பிலும் கரிசனைகொள்ளப்பட்டிருந்தால் மக்கள் வரிப்பணம் தவறாக பயன்படுத்தப்படுகின்றது என்றே நான் ஒத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் நான் அந்த விடயங்களை தவிர்த்து இராஜினாமா விடயத்தினை வெளிப்படுத்தினேன். எனது தனிப்பட்ட நிலைப்பாட்டையும் குறிப்பிட்டேன்.
இந்த கருத்துக்களால் என்னை சாடுபவர்கள், விமர்சிப்பவர்கள் ஒருபுறம் இருக்கையில், என்னைப் பொறுத்தவரையில் சம்பந்தனின் நற்பெயரை நான் பாதுகாத்துள்ளேன். தற்போது வளர்த்தகடா மார்பில் பாய்கிறது என்று விமர்சிப்பவர்கள், தாமாக வலிந்து ஊடகவியலாளர் மாநாட்டை யாழில் கூட்டி சம்பந்தன் தனது அந்திம காலம் வரையில் பதவியில் இருக்க விரும்புகின்றார் அதனால் தான் கட்சி சீரழிகின்றது என்று பொதுவெளியில் கூறியுள்ளார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றேன் என்றார்.
இந்தநேரத்தில், இடைமறித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், குறித்த வினாவை தவிர்ப்பதற்கு உங்களுக்கு தெரிவொன்று இருக்கையில் நீங்கள் எதற்காக பதிலளிக்க முனைந்தீர்கள் என்று வினாவொன்றை எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த சுமந்திரன், குறித்த நிகழ்ச்சியை நீங்கள் ஆரம்பத்திலிருந்து பார்த்தீர்கள் என்றால் நான் தேசிய கட்சிகள் இரண்டின் ஊழல்கள் தொடர்பில் அதிகமான விமர்சனங்களை முன்வைத்திருந்தேன். அதன்போது என்னுடைய கட்சியை மையப்படுத்தி வினா தொடுக்கப்பட்டபோது அதற்கு பதிலளிக்காது விட்டால் கிட்டத்தட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதாகவே மாறிவிடும். அத்துடன், ஊழலுக்கு எதிரான எனது கருத்துக்கள் தொடர்பிலான நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாகும். எனவே தான் அதற்கு பதிலளிக்க வேண்டிய ஏற்பட்டது.
அதேநேரம், தற்போதும் கூட, நான் சம்பந்தன் ஐயா என்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர், ஆதரவாக வழிகாட்டியாக இருந்தவர் என்பதை கூறும் அதேநேரம், அவருடைய நற்பெயரைப் பாதுகாப்பதாக இருந்தால் பதவியிலிருந் விலகுவதோடு அவர் கொழும்பில் வசிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்குச் சொந்தமான வீட்டை மீண்டும் கையளிக்க வேண்டும். அத்தோடு சம்பந்தன் பதவி விலகுவதானது, பாராளுமன்ற மற்றும் தேசிய மட்டச் செயற்பாடுகளுக்கும், திருகோணமலை மாவட்டத்திற்கும் நன்மைகளே அளிக்கும். மேலும் அவர் தமிழ் மக்களின் தலைவர் அந்தஸ்துடன் தொடர்ந்தும் நற்பெயருடன் இருப்பார் என்றார்