ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பகிஸ்கரிக்க வேண்டும் : செல்வராசா கஜேந்திரன்
இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்காலம் பாதுகாப்பானதாக மாற்றியமைக்கப்பட வேண்டுமானல் பெரும்பான்மையினத்தின் ஒற்றையாட்சி கட்டமைப்பு ஒழிக்கப்பட்டு ஒரு சமஸ்டி கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
தமிழர்களின் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தப்போகின்றோம் என்ற போர்வையினை போர்த்திக்கொண்டு தமிழர்களை ஏமாற்றி வாக்களிக்கச்செய்யும் உபாயம் கையாளப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய மேற்கு நாடுகளுடைய பின்னணியோடு கடந்த 15 வருடங்களாக ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொண்டு அதற்குள்ளான 13 ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாக வலியுறுத்தி வருகின்ற தரப்புக்கள் ஒன்றிணைந்து பொது வேட்பாளர் என்கின்ற போர்வையிலே தமிழ் மக்களினுடைய தேசிய அபிலாசைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த போகின்றோம் என்கின்ற ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனை வேட்பாளராக நிறுத்தி மக்களை ஏமாற்றி இந்த தேர்தலில் வாக்களிப்பு செய்கின்ற உபாயத்தையும் கையாண்டு வருகின்றார்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் கடந்த காலத்தில் தமிழர்களாகிய நாங்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தினுடைய இன அழிப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்தியிருக்கின்றோம். அந்த போராட்டங்கள் ஆயுத முனையில் ஒடுக்கப்பட்ட போது ஆயுதம் ஏந்தி போராடி இருக்கின்றோம் அந்த ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற முழு காலப்பகுதியிலும் முஸ்லிம் சகோதரர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருந்தார்கள்.
இந்த விடுதலைப் போராட்டத்தை முற்று முழுதாக அழித்து ஒழிப்பதற்கு முஸ்லிம் சகோதரர் கட்சிகளின் தலைவர்கள் நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை அரசோடு ஒத்துழைத்து இருந்தார்கள். ஆனால் அவ்வாறு செயல்பட்டிருந்தும் கூட யுத்தம் முடிவுக்கு வந்ததன் பிற்பாடு 10 வருடங்களில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று இருந்தது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்குமாறு வலியுறுத்தி வடகிழக்கில் தொடர்ச்சியான துண்டுப்பிரசுர விழிப்புணர்வு பிரச்சாரத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
வடக்கில் இந்த போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் இந்த துண்டுப்பிரசுர போராட்டம் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இது தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று காலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் கலந்துகொண்டு துண்டுப்பிரசுர பிரச்சாரத்தினை ஆரம்பித்துவைத்தார். இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.