எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை முன் நிறுத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய அரசியல் தலையீடுகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக வடக்கின் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் வேட்பாளர்களான சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தென்னிலங்கையின் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்காதிருக்க வடக்கின் அரசியல் தலைவர்கள் உத்தேசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டால், ஏழு தென் மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களின் நிலை எப்படி அமையும் என்ற சந்தேகம் அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
இந்த மாற்றங்களின்படி, இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான ஜனாதிபதித் தேர்தலாக அடுத்த ஜனாதிபதி தேர்தல் அமையும் என கருத்துக்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கம், பாராளுமன்ற தேர்தல் முறை மாற்றம் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (18) பாராளுமன்றத்தில் கட்சி தலைவர்களின் கூட்டத்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.