ஜனாதிபதி தேர்தலின் போது நான் யாருக்காகவும்,யார் சார்பாகவும் எந்த விஷயங்களையும் கூறவில்லை.மக்கள் யாரை விரும்பி வாக்களிக்கிறார்கள் அது மக்களின் விருப்பம் என்பது எனது கருத்தாக இருந்தது என இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் எம்.பி.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (25) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் என்னை சந்தித்து கதைத்த போது இனவாதமற்ற இலங்கையையும்,இலஞ்ச ஊழல் அற்ற இலங்கையை தான் உருவாக்குவதற்காக தான் பாடுபடுவதாக என்னிடம் உறுதி அளித்திருந்தார்.
அந்த வகையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க தனது உறுதி மொழியை தொடர்ச்சியாக இனவாதம் அற்ற நாடாக இலங்கை மாறுவதற்கும் இலஞ்ச ஊழல் அற்ற நாடாக இலங்கையை கொண்டு வருவதற்கும் மற்றும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர் நினைவில் வைத்து தனது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.இதை நான் அவரிடம் கோரிக்கையாக முன் வைக்கிறேன்.
ஜனாதிபதி தேர்தலின் போது நான் யாருக்காகவும்,யார் சார்பாகவும் எந்த விஷயங்களையும் கூறவில்லை.மக்கள் யாரை விரும்பி வாக்களிக்கிறார்கள் அது மக்களின் விருப்பம் என்பது எனது கருத்தாக இருந்தது.
பல்வேறு பட்ட குழப்பங்களுக்கு மத்தியில் இந்த ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.கடந்த 2 வருடங்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கதைத்து மன்னார் மாவட்டத்தில் இருந்த சில பிரச்சினைகளுக்கு தீர்வை முன் வைத்தேன்.
முல்லைத்தீவிலும் ஏற்பட சில பிரச்சனைகளுக்கு ரணில் விக்கிரமசிங்க ஊடாக தீர்வை பெற்றுக் கொடுத்தேன்.மக்களின் பிரச்சினைகளை நான் அவரிடம் முன் வைத்த போது சில விடையங்களை சுமூகமான முறையில் தீர்த்து வைத்தார். அண்மையில் ரணில் விக்கிரம சிங்க யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்த போது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களின் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
அதே போல் அண்மையில் மன்னாருக்கு வருகின்ற போது எனது வீட்டிற்கு வரவுள்ளதாக கூறியிருந்தார்.அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளடங்கலாக பல பிரச்சினைகளுக்கு சாதகமான பதிலை தந்ததன் அடிப்படையில் இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை கலந்தாலோசிக்கும் வகையில் அவரது வருகை அமைந்திருந்தது.அதன் அடிப்படையில் அவர் இங்கு வந்து சென்றிருந்தார். இந்நிலையில் அண்மைக்காலமாக என் மீது சிலர் குற்றச்சாட்டுக்களை வைத்து வருகின்றனர் என தெரிவித்தார்.