ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்காக தலா 200 மில்லியன் ரூபாவை செலவு
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமாயின் ஒவ்வொரு வேட்பாளருக்கும் என 200 மில்லியன் ரூபாவை செலவிட நேரும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதுபற்றிய தகவல்களை அறிவித்தார். 27 தசம் ஐந்து அங்குலம் கொண்ட வாக்குச்சீட்டையே அச்சிட முடிகிறது.
இந்த அளவைவிட நீளமான வாக்குச்சீட்டை அச்சிட வேண்டிய நிலை ஏற்படுமாயின் இரண்டு பகுதிகளாக அதனை பிரசுரிக்க நேரிடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு அமைய வாக்குப்பெட்டிகளுக்குள் செலுத்தப்படும் வாக்குச்சீட்டுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதனால் அதற்கான செலவு ஆரம்பம் முதல் அதிகரிக்கும் என்றும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மேலும் இரண்டு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்கள். நவ-சம-சமாஜக் கட்சியின் வேட்பாளருக்காக பிரிந்த விக்கிரமசிங்கவும் அப்பே ஜனபல கட்சிக்காக கீர்த்தி விக்கிரமரத்னவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை கட்டுப்பணம் செலுத்தியோரின் எண்ணிக்கை 27 வரை அதிகரித்திருக்கின்றது.