தபால் மூல வாக்குச்சீட்டுகளை அச்சிட்டு விட்டதாக தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
பொதுத் தேர்தலுக்குரிய தபால்மூல வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இம்முறை தபால்மூலம் வாக்களிக்க ஏழு இலட்சத்து 38 ஆயிரத்து 959 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில், தபால்மூலம் வாக்களிக்க விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகமானதாக உள்ளது.
அச்சிடப்பட்ட வாக்காளர் அட்டைகள் மாவட்ட தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் கூறினார்.
மாவட்ட செயலக வளாகங்களில் அமைந்துள்ள அலுவலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், பொலிஸ் திணைக்களம் சார்ந்த அலுவலகங்கள் ஆகியவற்றில் வேலை செய்யும் வாக்காளர்கள் எதிர்வரும் 30ஆம் திகதியும் அடுத்த மாதம் நான்காம் திகதியும் தபால் மூலம் வாக்களிக்கலாம்.
ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவ முகாம்களைச் சேர்ந்த தபால்மூல வாக்காளர்கள் அடுத்த மாதம் முதலாம் திகதியும் நான்காம் திகதியும் வாக்குகளை செலுத்த முடியும்.
அந்தத் தினங்களில் வாக்குகளை செலுத்த முடியாத வாக்காளர்கள் அடுத்த மாதம் ஏழாம் திகதியும் எட்டாம் திகதியும் தபால்மூல வாக்குகளை செலுத்த வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.