தமிழர் பகுதிகளில் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவுகின்றது பா.ஜ.க. – கஜேந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு
இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி இலங்கையின் தமிழர் பகுதிகளில் சிவசேனை அமைப்பின் ஒத்துழைப்புடன் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
இலங்கையில் சிங்கள பௌத்தமயமாக்கல் இடம்பெற்று வருகின்றபோது, இந்தியாவின் பா.ஜ.கவின் விரிவாக்கமாக இருக்கின்ற சிவசேனையின் இலங்கை முகவர்கள், தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்படுகினற பௌத்த விகாரைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கின்ற செயற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தில் இலங்கைக்கு எவ்வாறான நிலைமை காணப்படும் என்று கஜேந்திரன் எம்.பியிடம் சர்வதேச ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த விரிவாக்கத்துக்கு எந்தவித இடையூறும் இல்லை. இந்தியா சிங்கள பௌத்த விரிவாக்கத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும், சிங்கள பௌத்த விரிவாக்கத்துக்குச் சீனாவிடம் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்ற நம்பிக்கையை உருவாக்கி இலங்கையைத் தமது நட்பு சக்தியாக மாற்றுகின்ற செயற்பாடுகள் மாத்திரமே இடம்பெறுகின்றது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், இந்தியா தமிழ் தேசத்தை அங்கீகரித்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி அரசமைப்பை இலங்கையில் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதற்காக இந்தியா எமது நட்பு சக்தியாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம் என்றும் கஜேந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.