Home » தமிழ் பொதுவேட்பாளரால் தமிழ் மக்களின் வாக்குகள் ஒருபோதும் பிளவுபடாதாம் – விக்கி சொல்கின்றார்

தமிழ் பொதுவேட்பாளரால் தமிழ் மக்களின் வாக்குகள் ஒருபோதும் பிளவுபடாதாம் – விக்கி சொல்கின்றார்

Source

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால், வஜிர அபேவர்தன கூறுவதுபோல் தமிழர்களின் வாக்குகள் பிளவுபடாது எனவும், மாறாக இதுவரை காலமும் பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பர் எனவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.  

தமிழர் தரப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்கி, தமிழர் வாக்குகளைப் பிரிக்கக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன கூறியிருப்பது பற்றி தனது நிலைப்பாட்டை ஊடகங்களிடம் தெளிவுபடுத்தியிருக்கும் விக்கினேஸ்வரன், இது குறித்து மேலும் கூறியிருப்பதாவது:-

“எனது நண்பரான வஜிர அபேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராவார். எனவே, பதவியில் உள்ள ஜனாதிபதியை வெற்றியடையச் செய்வதற்கு அவரால் வேறு எதைக் கூற முடியும்? ஆனால், அவர் தமிழர்கள் என்ற கோணத்திலிருந்து நாம் முகங்கொடுக்கும் பிரச்சினையைப் பார்த்தால், இவ்வாறு கூறமாட்டார்.

தமிழர்களாகிய நாம் இதுவரையில் பெரும்பான்மையின சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கே வாக்களித்திருக்கின்றோம். அவர்கள் அனைவரும் எமது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாக வாக்குறுதியளித்தனர்.

ஆனால், தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் அவர்களுக்கு எம்மைத் தெரியவே இல்லை. அவர்கள் வெகு இலகுவாக எம்மைப் புறக்கணித்துவிட்டனர். நாங்கள் 1956 ஆம் ஆண்டு எங்கே இருந்தோமோ, இப்போதும் அங்கேயே இருக்கின்றோம். வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை.

 இலங்கையில் இன்றளவிலே இனத்துவப்போக்கு நிலவுகின்றது. சிங்களவர்களால் தெரிவுசெய்யப்படும் சிங்களவர்களுக்கான சிங்கள அரசே இயங்குகின்றது.

தமிழர்கள் இந்த மண்ணில், அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர் என்ற உண்மை சிங்களவர்களால் ஏற்கப்படவில்லை. பிரித்தானியர்கள் நிர்வாகத்தேவைகளுக்காக நாட்டை ஒன்றிணைத்தனர்.

இருப்பினும் அவர்கள் வெளியேறும்போது எமக்கு சமஷ்டி அரசமைப்பை வழங்கியிருக்கவேண்டும். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வியை நிறைவு செய்துகொண்டு 1926 ஆம் ஆண்டு நாடு திரும்பிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சமஷ்டி அரசமைப்பையே வலியுறுத்தினார். கண்டிய சிங்களவர்கள் டொனமூர் ஆணைக்குழுவிடம் சமஷ்டி அரசமைப்பையே கோரினர். ஏனெனில் கண்டிய சிங்களவர்கள் தம்மைத்தாமே ஆளுகின்ற சுயநிர்ணய உரிமைக்கான சட்டபூர்வ அதிகாரம் தமக்கு வேண்டுமெனக் கருதினர்.

இவ்வாறானதொரு பின்னிணயில் வடக்கு, கிழக்குவாழ் தமிழ்பேசும் மக்களின் சார்பில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறங்கினால் அவர் ஜனாதிபதியாகத் தெரிவாகமாட்டார் என்பது உண்மையே. தமிழ் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்குவது தமிழர்களின் வாக்குகளைப் பிளவுபடுத்தும் என்ற தர்க்கம் முன்வைக்கப்படுகின்றது.

ஆனால், மிகப்பொருத்தமான தமிழ் வேட்பாளரொருவர் களமிறக்கப்பட்டால், தமிழ் மக்கள் அனைவரும் பெரும்பான்மையின வேட்பாளருக்கு வாக்களிப்பதற்குப் பதிலாக, அந்தத் தமிழ் பொதுவேட்பாளருக்கே வாக்களிப்பார்கள். தமிழர்கள் மிக நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். எனவே , இதுவரை காலமும் சிங்கள அரசியல்வாதிகளால் தமிழ் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டார்கள் என்பதை உலகுக்கு எடுத்துரைப்பதற்கு இது மிகச்சிறந்ததொரு சந்தர்ப்பமாகும். அதிகாரம் மிக்க இடத்திலிருந்து தமிழர்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்குத் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவது மிக முக்கியமானதாகும்.” – என்றார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image