தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி தொடர்பில் ஏற்பட்டுள்ள கேள்விக்குறியான நிலை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கோரிக்கைக்கு அமைய, குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று (26) ரம்புக்வெல்ல அமைச்சரிடம் வாக்குமூலம் பெற்றிருந்தது.
காலை 10.30 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வா ஊடாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்குமாறு கெஹலிய ரம்புக்வெல்ல கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி இன்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையின் போது, கெஹலிய ரம்புக்வெல்லவின் ஆலோசனையின் பேரில் மருந்து இறக்குமதி தொடர்பான கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அமைச்சர் ரம்புக்வெல்ல அதனை மறுத்ததோடு விசாரணைகளுக்கு ஆதரவாக அறிக்கையொன்றை வழங்கினார். இது தொடர்பில் சட்டத்தரணி மனோஜ் கமகே ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், மருந்து இறக்குமதி தொடர்பான சந்தேகத்திற்குரிய சம்பவம் தொடர்பான முறைப்பாடு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் செய்யப்பட்டதாகவும் அமைச்சின் டெண்டர் நடவடிக்கைக்கும் அமைச்சருக்கும் தொடர்பில்லை எனவும் தெரிவித்தார்.
இதன்படி, குறித்த கொடுக்கல் வாங்கல் அமைச்சின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டதாக சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இதேவேளை, அமைச்சரின் எழுத்து மூலமான சாட்சியங்கள் அனைத்தும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.