Home » தலைவன் என்ற சொல்லுக்கு சிறந்த உதாரணம் கேப்டன் விஜயகாந்த்! ஜீவன் புகழாரம்

தலைவன் என்ற சொல்லுக்கு சிறந்த உதாரணம் கேப்டன் விஜயகாந்த்! ஜீவன் புகழாரம்

Source

விஜயகாந்த் நலமுடன் இருந்திருந்தால், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை பார்த்துக்கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டார் என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28ஆம் திகதி காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் மறைவைடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் என பல்லாயிரம் பேர் சென்னைக்கு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.

திரையுலகினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமே விஜயகாந்த்தின் மறைவை நினைத்து இன்னமும் கலங்கி நிற்கிறது. தற்போது விஜயகாந்த்தை நல்லடக்கம் செய்த இடத்தில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இலங்கை நாட்டின் அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் விஜயகாந்த் விஜயகாந்த் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவரது வீட்டுக்கு சென்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பிரேமலதா விஜயகாந்திற்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜீவன் தொண்டமான், “தலைவன் என்ற சொல்லுக்கு சிறந்த உதாரணம் கேப்டன் விஜயகாந்த். கேப்டன் விஜயகாந்த் அனைத்து மக்களின் மீது அன்பு வைத்திருந்த ஒரு பெரும் தலைவர். யார் கஷ்டம் என வந்தாலும் அவர்களுக்கு உதவி செய்யக் கூடியவர். தேமுதிக தொண்டர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஏழை எளிய மக்களுக்கு கேப்டன் செய்த உதவிகளை கணக்கிட முடியாது.

இலங்கை மக்கள் மீது அதிக பாசம் கொண்டவர் கேப்டன். இலங்கை மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். அவர் மட்டும் உடல் நலத்துடன் இருந்திருந்தால், இலங்கை இத்தகைய பொருளாதார நெருக்கடியில் இருப்பதை பார்த்து அமைதியாக இருந்திருக்க மாட்டார். இலங்கைக்கு மிகப்பெரிய நிதியுதவியை அவர் நிச்சயம் செய்திருப்பார். அவரது இழப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இலங்கைக்கும் பேரிழப்பு தான். இலங்கைத் தமிழர்களை வைத்து அனைவரும் இன்றைக்கு அரசியல் செய்கிறார்கள், ஆனால் அவர்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு காண யாரும் முன் வரவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் மக்கள் மீது அதீத அன்பு கொண்டவர் விஜயகாந்த். 80களில் இலங்கையில் தமிழர்கள் படுகொலை அதிகரித்த போது, சென்னையில் நடிகர் நடிகைகளை திரட்டி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார் விஜயகாந்த். இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த மக்களுக்காக பல உதவிகளை செய்துள்ளார். 1989-ல் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களை சந்தித்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தார் விஜயகாந்த்.

தொடர்ந்து, பல இலங்கை அகதிகள் முகாமுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வந்தார் விஜயகாந்த். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மீதான அபிமானத்தால், தனது மகனுக்கு விஜய பிரபாகரன் என்றும், தனது 100வது படத்துக்கு கேப்டன் பிரபாகரன் என்றும் பெயர் வைத்தார் விஜயகாந்த்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image