திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி சபைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் நிலவரத்திற்கமைய
162 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஏழு மற்றும் சுயேட்சை குழுவொன்றின் வேட்புமனுக்கள் உள்ளடங்களாக 8 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் திருகோணமலை மாநகர சபைக்கு 15 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 04 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன. இவற்றுள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பு மனு உரிய பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை ஓர் சுயேட்சைக்குழுவின் வேட்புமனு உரிய நேரத்திற்கு சமர்ப்பிக்காமை காரணமாகவும் நிராகரிக்கப்பட்டன.
மேலும் தமிழர் விடுதலை கூட்டணியில் வேட்பாளர் ஒருவரின் சத்தியப்பிரமான உறுதியுரை இன்மையாலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் இரு வேட்பாளர்களின் பூரணமற்ற சத்தியப்பிரமாண உறுதியுரையை வழங்கியமையாலும் அவர்களின் வேட்பாளர் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டன.
கிண்ணியா நகர சபைக்காக 13 அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தன. இவற்றுள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனு உரிய பெண் வேட்பாளர் இன்மை காரணமாக நிராகரிக்கப்பட்டது.
வெருகல் பிரதேச சபைக்காக 13 அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களை சமர்ப்பித்தன. இச்சபைக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஒரு வேட்பாளர் சத்தியப்பிரமாண உறுதியுரை இன்மை காரணமாக நிராகரிக்கப்பட்டது.
சேருவல பிரதேச சபைக்கு 10 அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன. இதில் இலங்கை தமிழரசுக்கட்சி தாக்கல் செய்த வேட்புமனு உரிய பெண் வேட்பாளர் இன்மை காரணமாக நிராகரிக்கப்பட்டன.
கந்தளாய் பிரதேச சபைக்கு 13 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதனுள் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் உள்ளடங்கும்.இச்சபைக்காக வேட்புமனு தாக்கல் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்புமனு உரிய பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை இன்மை காரணமாகவும் சுதந்திர ஐக்கிய முன்னணியின் வேட்புமனு வேட்பாளர்களின் எண்ணிக்கை பூரணப்படுத்தப்படாமை காரணமாகவும் நிராகரிக்கப்பட்டன.
இதேபோன்று மொரவெவ பிரதேச சபைக்கு 07 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கோமரங்கடவெல பிரதேச சபைக்கு 05 அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்களும் பதவிசிறீபுர பிரதேச சபைக்கு 07 அரசியல் கட்சிகளும் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு 16 அரசியல் கட்சிகளும் 05 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தன. இவற்றுள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்புமனு வேட்புமனுவில் கட்சியின் பெயர் இடத்தில் குறிப்பிடப்படாமை காரணமாக முழுமையாக நிராகரிக்கப்பட்டது. மேலும் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் இரு வேட்பாளர் அந்தஸ்த்து பூரணமற்ற சத்தியப்பிரமானம் காரணமாக நிராகரிக்கப்பட்டது.
குச்சவெளி பிரதேச சபைக்காக 16 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இவற்றில் இரண்டு சுயேட்சை குழுக்களும் அடங்கும். இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் வேட்புமனு உரிய எண்ணிக்கையான வேட்பாளர் இன்மை காரணமாக நிராகரிக்கப்பட்டது.
தம்பலகாமம் பிரதேச சபைக்காக 11 வேட்புமனுக்கள் அரசியல் கட்சிகளால் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோன்று
மூதூர் பிரதேச சபைக்கு 15 அரசியல் கட்சிகளும் 03சுயேட்சை குழுக்களும் உள்ளடங்கலாக 18 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
கிண்ணியா பிரதேச சபைக்கு 09 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஐக்கிய தேசிய கட்சியின் ஓர் வேட்பாளர் பூரணமற்ற சத்தியப்பிரமாணம் காரணமாக வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கமைய திருகோணமலையில்
13 உள்ளூராட்சி சபைகளுக்குமாக 3179 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றர்.
இவற்றின் அடிப்படையில் திருகோணமலையில் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இரு சபைகளிலும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், ஈ.பி.டி.பி,தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ மற்றும் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளின் ஒரு வேட்பு மனுக்களுடன் ஓர் சுயேட்சைக் குழுவினது வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது.
TL