தேர்தலை கண்காணிப்பதற்கு 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு
ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைத்தீவு போன்ற நாடுகளும் இதில் அடங்கும். ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட சகல செயற்பாடுகளையும் கண்காணித்த பின்னர், அவர்கள் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலை அவதானிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே நாட்டை வந்தடைந்தனர்.
பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வரவுள்ளனர்.
அந்த அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க தேர்தல்களை கண்காணிக்க அனுமதி அளிக்கப்பட்டதாக தலைவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருந்த சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளரான மறைந்த முகம்மட் இல்யாஸ{க்குப் பதிலாக வேறு ஒருவரை முன்னிறுத்துவதற்கு மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இல்யாஸின் இறப்புச் சான்றிதழைச் சமர்ப்பித்து, அவர் சார்பாக வேட்பு மனுவில் கையொப்பமிட்டவருக்கு வேறு ஒருவரைப் பரிந்துரைக்க முடியும் என்றும் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் மொஹமட் இலியாஸின் வாக்காளர் அடையாளமும் பெயரும் ஏற்கனவே வாக்குச்சீட்டில் அச்சிடப்பட்டிருப்பதால், அதில் மாற்றம் ஏற்படாது எனவும் தலைவர் தெரிவித்தார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு வேட்புமனுவைச் சமர்ப்பித்த மொஹமட் இலியாஸ், கடந்த புதன்கிழமை திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.