நாட்டின் எதிர்காலம் குறித்து பேச முடியாதவர்களுக்கு அதனை பொறுப்பேற்கும் உரிமை கிடையாது
நாட்டின் எதிர்காலம் குறித்து பேச முடியாதவர்களுக்கு அதனை பொறுப்பேற்றும் உரிமை கிடையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து பேசுபவர்களும் மாத்திரமே அதனை பொறுப்பேற்க முடியும். அனுரகுமார திஸாநாயக்கவின் கொள்கைப் பிரகடனத்தில், நாட்டின் வர்த்தகர்கள், கைத்தொழில்துறையினர் ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில், இலங்கை செய்து கொண்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை இரத்துச் செய்வதாக மறுநாள் தெரிவித்திருந்தார்.
அந்த ஒப்பந்தங்கள் இல்லாமல், ஏற்றுமதி பொருளாதாரம் எப்படி உருவாகும் என்று சொல்ல முடியாது. தேசிய வங்கியாளர்கள் சங்கம் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அறிவார்ந்த தலைமையுடன் வங்கியாளர்கள் என்ற தொனிப்பொருளின் கீழ் இது நடைபெற்றது.
வாக்காளர் என்ற வகையில், அவர்கள் அளிக்கும் வாக்குகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விளக்கினார்.
நாடு என்ற ரீதியில் மாற்றத்திற்கு தயாராக இருந்தால், ஏனைய துறைகளிலும் மாற்றங்களை செய்ய முடியும். சர்வதேச நாணய நிதியம் உட்பட 18 கடன் வழங்கும் நாடுகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ள கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
இயலும் ஸ்ரீலங்கா என்ற கொள்கை பொருளாதாரத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. பொருளாதாரத்தை மையப்படுத்தி புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.