நாட்டை தான் பொறுப்பேற்காமல் விட்டிருந்தால் நாடு பங்களாதேஷாக மாறியிருக்கும் – ஜனாதிபதி
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 2022ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் பதவியை இராஜினாமா செய்த போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியை ஏற்குமாறு எம்.ஏ.சுமந்திரன் கோரியபோது எதிர்க்கட்சித் தலைவர் அதனை ஏற்காமல் ஓடிவிட்டார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அப்போது தாம் நாட்டை பொறுப்பேற்று ஆட்சியை ஏற்காது இருந்திருந்தால் இலங்கை மற்றொரு பங்களாதேஷாக மாறியிருக்கும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
தொம்பே பஸ் நிலையத்திற்கு அருகில் நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தனித்து நின்று நாட்டை தற்போதைய நிலைக்கு கொண்டு வருவதற்கு பல கட்சிகள் தனக்கு ஆதரவளித்தன. ஆனால் எதிர்க்கட்சிகள் இதில் சேரவில்லை. தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மை மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.
விலைக் குறைப்பை மேற்கொள்ள முடியும், வரிச்சுமை குறைக்கப்படும் என எதிர்கட்சித் தலைவரும் அனுரகுமார திஸாநாயக்கவும் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது போல் செயற்பட்டால் அரசாங்கத்தின் வருமானம் குறையும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்திலும் அவ்வாறே செயற்பட்டமையினால் நாடு பாரிய பாதாளத்திற்கு சென்றதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை மீண்டும் 400 ரூபாவாக உயர்த்துவது அவசியமா என ஜனாதிபதி மக்களிடம் கேள்வி எழுப்பினார். கடந்த நான்கு ஆண்டுகளாக வேலைவாய்ப்பு வழங்க முடியவில்லை.
ஆனால் அடுத்த ஆண்டு ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
இதேவேளை, நேற்று பிற்பகல் சிலாபத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொண்டார். அதில், சாத்தியமான தெளிவான தேசிய வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.