தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (3ம் திகதி) புயலாக மாறும் என தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி திருகோணமலையில் இருந்து வடகிழக்கில் சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை (5) இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் மேற்கு-வட-மேற்கு திசையில் இந்தியாவின் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.100 மில்லிமீற்றருக்கு மேல், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மற்றும் ஏனைய மாகாணங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யும்.
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.