இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவிவரும் நிபா வைரஸ் காரணமாக இலங்கையில் பன்றி இறைச்சி நுகர்வு குறைவடைந்து வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பன்றி இறைச்சி உற்பத்தியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக விவசாய அமைச்சின் கால்நடை அபிவிருத்தி பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இலங்கையில் நீபா வைரஸ் பரவும் அபாயம் இல்லை எனவும், பன்றி இறைச்சியை உற்கொள்வது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், நாட்டில் உள்ள அனைத்து பன்றி பண்ணைகளையும் கண்காணிக்கும் திட்டமொன்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பன்றி இறைச்சியை உட்கொள்வதில் தேவையற்ற அச்சம் அவசியம் இல்லை எனவும், பன்றி இறைச்சியை உட்கொள்வதில் பிரச்சினை இல்லை எனவும் கால்நடை அபிவிருத்தி பிரிவின் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.