நிர்மாணத்துறையில் நடுத்தர மற்றும் பாரிய அளவிலான தொழிலதிபர்களின் நிலுவைத் தொகையை தவணை முறையில் செலுத்தத் திட்டம்
நிர்மாணத்துறையில் உள்ள நடுத்தர மற்றும் பாரிய அளவிலான தொழிலதிபர்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. திறைசேரியிலிருந்து பெறப்படும் நிதி ஒதுக்கீட்டின்படி, அவற்றை தவணை முறையில் செலுத்துவது குறித்து அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார். நிர்மாணத்துறையில், நிர்மாணத்துறையினரை பாதுகாக்க முடியாவிட்டால், எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் குழுவுடன், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
நிர்மாணத்துறையில் முதலீட்டு வாய்ப்புகளைப் பெறுவதற்காக, அண்டை நாடுகளின் திட்டங்களுக்கு அவர்களை வழிநடத்தும் வகையில் கொள்கைகளை திருத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அதன்படி, நிர்மாணத் தொழில்துறையினர், தமது தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட அதிகாரிகள் மற்றும் இயந்திரங்களை இந்த நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். இதன்மூலம், அன்னியச் செலாவணியை ஈட்டுவதுடன், தொழில் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார். நிர்மாணத்துறையில் சுமார் 13 லட்சம் தொழிலாளர்கள் தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுத்து, அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.