பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த பின்னர் கலந்துரையாடல்களை மேற்கொண்டு எதிர்வரும் தேர்தலுக்கான திட்டங்களை வகுத்துள்ளார்.
இவ்வாறே பசில் மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு ஜனாதிபதி சம்மதிக்க வைப்பதே இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலை தான் முதலில் நடத்துவேன் என்றும், ஜனாதிபதி தேர்தலில் தாம் தனது கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுவேன் என்றும் ஜனாதிபதி பசிலிடம் நேரடியாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு மற்றும் கட்சியின் அரசியல் பற்றி சிந்தித்தால் முதலில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஆனால், மக்கள் ஜனாதிபதித் தேர்தலை கோருவதாகவும், வீழ்ந்த நாட்டை தாம் கையகப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ள ஜனாதிபதி, மக்கள் தம்மைப் புறக்கணிப்பார்கள் என நினைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பொஹொட்டுவ இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.