பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பில் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை இது அமுல்படுத்தப்படும். மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் என்பன இணைந்து, ஒன்றிணைந்த போக்குவரத்து வேலைத்திட்டத்தினை அமுலப்படுத்தியுள்ளது. பயணிகளின் வசதி கருதி வெளி மாகாணங்களுக்கும், வெளி மாகாணங்களிலிருந்து கொழும்பிற்கு வருகை தருவதற்கும் விசேட போக்குவரத்து ஒழுங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மேல் மாகாணத்தில் வர்த்தக வலயங்களிலும் விசேட பஸ் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடுவெல, கடவத்த, மாக்கும்புர மத்திய நிலையங்களிலிருந்து அதிவேக நெடுஞ்சாலை ஊடாக விசேட பஸ் சேவை இடம்பெறும்;.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ரயில்வே திணைக்களமும் கடந்த நான்காம் திகதி முதல் 14ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதேவேளை பண்டிகைக்காலம் மற்றும் உயிர்த்த ஞாயிறு வாரத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுலப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் தேவைக்கு ஏற்ப படைப்பிரிவினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அத்துடன் பொருள் கொள்வனில் ஈடுபடுவோரின் பாதுகாப்பு விடயத்தில் பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிகள், புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும் போது குறித்த பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையத்துடன் தொடர்புபட்டு செயற்படுமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.