‘பயங்கரவாதி’ நாவலில் வரும் ‘மாறன்’ யார்? CTID விசாரணை
போரில் பெற்றோரை இழந்து அனைத்து தடைகளையும் தாண்டி பல்கலைகழக மாணவர் தலைவராக மாறிய குழந்தை போரிலேயே இறப்பதைக் கருவாகக் கொண்டு நாவல் எழுதிய தமிழ் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் தலைவரிடம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு (CTID) விசாரணை நடத்தியுள்ளது.
ஊடகவியலாளரும் எழுத்தாளருமான பிரதீபன் தீபச்செல்வன் கடந்த ஜூன் 16ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் கிளிநொச்சி, பரந்தனில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, ‘பயங்கரவாதி’ நாவலை எழுதியதன் ஊடாக புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்கான திட்டம் உள்ளதா என இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஜி.ஜி.சரத் ஆனந்த “ஸ்மாரக ஷீலாவத” என்ற பெயரில் சிங்களத்தில் மொழிபெயர்த்த, போருக்குப் பின்னர் வடக்கில் எழுதப்பட்ட முதல் நாவலாகக் கருதப்படும் நடுகல் நூலின் ஆசிரியரான தீபச்செல்வன், பல வாசகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தவராவார்.
‘பயங்கரவாதி’ நாவல் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் எழுதப்பட்டதா என பிரதீபன் தீபச்செல்வனிடம் கேள்வி எழுப்பிய பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர், அந்த நாவலில் வரும் ‘மாறன்’ என்ற கதாபாத்திரம் யார், தற்போது அவர் எங்கே இருக்கின்றார் என வினவியுள்ளது. நாவலில் இடம்பெற்றுள்ள இராணுவ கதாபாத்திரங்கள் குறித்தும் தீபச்செல்வனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பிரதீபன் தீபச்செல்வன் தனது நாவலில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கற்பனையே என பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.
புலிகளை உயிர்ப்பிக்கும் கருத்துக்கள் நாவலில் உள்ளதா என பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரின் கேள்விக்கு பதிலளித்த ஆசிரியர், தனது நாவலில் அவ்வாறான கருத்து இல்லை எனவும், கடந்த கால நிகழ்வுகளை அது பேசுவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சில மாணவர் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் கொல்லப்பட்டதை அடிப்படையாக கொண்டு மாறன் என்ற கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கி, போரில் தாய் தந்தையை இழந்த மாறன், அனைத்து தடைகளையும் தாண்டி மாணவர் தலைவராகி, போரிலேயே இறப்பதை தன்னுடைய படைப்பு பேசுவதாக விளக்கமளித்ததாக அவர் கூறுகின்றார்.
“போரில் தாய், தந்தையரை இழந்த ஒரு குழந்தை அதிலிருந்து தப்பி கல்வி கற்று பல்கலைக்கழகம் செல்வதையும் அங்கு மாணவத் தலைவராகும் அந்த இளைஞன் பின்னர் போரால் கொல்லப்படுவதையும் எனது நாவல் பேசுவதாக விளக்கமளித்தேன்,” என தீபச்செல்வன் தெரிவிக்கின்றார்.
எந்த சூழ்நிலையிலும் கல்வியை கைவிடாத மாறன் என்ற கதாபாத்திரம் வழியாக இந்த நாவல் கல்வியை பேசகிறது எனவும், இனிவரும் காலத்தில் போரும் மரணங்களும் அழிவுகளும் இடம்பெறக்கூடாது என்பதை வலியுறுத்தவே இந்த நாவலை தான் எழுதியதாகவும் பொலிஸாருக்கு விளக்கமளித்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.
ஊடகவியலாளரும் எழுத்தாளருமான பிரதீபன் தீபச்செல்வன் தனது நாவலின் உள்ளடக்கம் தொடர்பில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய மேலதிக விளக்கம் குறித்து தனது ஊடக சகாக்களிடம் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்.
“பிழையான இராணுவத்தினர் மத்தியில் உள்ள நல்ல இராணுவ அதிகாரிகளையும் விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்ட இராணுவ சிப்பாய்களையும் பற்றி பயங்கரவாதி நாவல் பேசுகிறது என்றும் இதனை சிங்கள மக்கள் வாசித்தால் தமிழர்களை புரிந்து கொள்ள வழி வகுக்குமே தவிர, இன வேறுபாட்டை ஒருபோதும் ஏற்படுத்தாது என்றும் எடுத்துரைத்தேன்.”
ஆனையிறவு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு மாத காலத் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு மூத்த தமிழ் எழுத்தாளர் நா.யோகேந்திரன் எழுதிய ’34 நாட்களில் நீந்திக்கடந்த நெருப்பாறு என்ற நாவலை வெளியீட்டு நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக, தமிழ் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் தலைவரும் எழுத்தாளருமான பிரதீபன் தீபச்செல்வன், ஏப்ரல் 11ஆம் திகதி, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் (CTID) கிளிநொச்சி, பரந்தன் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, இரண்டரை மணித்தியாலங்களுக்கு மேல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.