பல்கலைக்கழக பிரவேசத்திற்காக 90 ஆயிரம் விண்ணப்பங்கள்
இம்முறை பல்கலைக்கழக பிரவேசத்திற்காக சுமார் 90 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
இவர்களுள் 45 ஆயிரம் பேரை பல்கலைக்கழங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை பல்கலைகழகங்களுக்கு தெரிவு செய்யும் பணிகள் 95 வீதம் பூர்த்தியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனை பெறுபேறுகளின் பின்னரே பல்கலைகழக தெரிவு இடம்பெற்றது.
இருப்பினும் இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியான உடனையே இந்தப் பணிகள் ஆரம்பமாகின. அந்த வகையில், 95 வீதமான பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.
க.பொ.த உயர்தர பரீட்சை மீள்பரிசீலினை முடிவுகளின் பின்னர் எஞ்சிய ஐந்து வீத பணிகள் பூர்த்தியடையும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.