பிரபாகரனை சந்திக்க மல்வத்து பீட மகாநாயக்க தேரர் பல தடவை முயற்சி
யுத்த காலத்தில் மல்வத்து பீட மகாநாயக்க தேரர் ஆறு தடவைக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை சந்திக்க இலங்கை அரசாங்கம் ஊடாக முயன்றதாகவும், ஆனால் அந்த விடயம் கைகூடவில்லை என தெரிவித்ததாக உலக தமிழர் பேரவையின் தலைவர் சுரேந்திரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
இலங்கையில் பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம், அதேபோல சர்வமத தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தோம்.
அவர்களை சந்தித்து தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்ற விடயத்தையும், போர் குற்றங்களுக்கு பொறுப்பு கூறல் ஒரு முக்கியமான விடயம் என்றும், வெளிநாடுகளின் பிரேரணைகளை நிறைவேற்ற வேண்டியது ஒரு முக்கியமான விடயம் என்பது போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பிரேரணையொன்றை ஜனாதிபதி மற்றும் ஏனையோரிடம் கையளித்திருக்கின்றோம்.
மதகுருமார்களுடன் ஒன்று சேர்ந்து 25 மாவட்டங்களுக்கு சென்று இந்த பிரச்சினைளுக்கு தீர்வை ஒன்றிணைந்து கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்களது அடிப்படை நோக்கம் ஆகும்.
அரசியல்வாதிகளை சந்திப்பதன் நோக்கம், அரசியல்வாதிகளுக்கு இப்படியான வேலை திட்டத்தை நாங்கள் செய்கின்றோம் என்பதனை வெளிப்படையாக கூற வேண்டும் என்பதற்கானகவே, இது தொடர்பில் குறை கூறாது அவர்கள் செயல்பட வேண்டும்.
குறிப்பாக அரசாங்கத்தினுடைய வேலை திட்டம் அல்லது பௌத்தர்களுடைய வேலை திட்டம் என குறை கூறக்கூடாது என்பதற்காக நாங்கள் அரசியல்வாதிகளுக்கும் திட்டத்தினை தெளிவாக கூறுவோம்.
பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்துவதே எமது நோக்கம். மக்களே தீர்ப்பு கூற வேண்டும் என்பதே எமது நோக்கம். அரசியல்வாதிகள் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளையும் சந்திக்கவுள்ளோம்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தவிர ஏனையோரை சந்திக்கவுள்ளோம்.
பலதரப்பட்ட சமூகத்தினரை சந்தித்து எமது வேலை திட்டத்தினை மக்கள் மயப்படுத்தி மக்கள் மத்தியில் இருந்து பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை காண முற்படுகிறோம்.
அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை நாங்கள் சந்தித்தபோது பல விடயங்களை அவர் கூறினர். சகோதரத்துவம், சமதர்மம், சமாதானம் என்ற அடிப்படையில் பணியாற்றினால் இலங்கையில் பிரச்சினைகள் இருக்காது என அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் கூறினார்.
அரசியல்வாதிகள் இவ்வாறு செய்வதில்லை. நீங்கள் மக்களிடம் செல்லப்போவதை வரவேற்பதாகவும் நிச்சயமாக உறுதுணையாக இருப்போம் எனவும் அதனைத் தாம் வெளிப்படையாகவே கூறுவதாகவும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரதர் தெரிவித்தார்.
மல்வத்துபீட மகாநாயக்க தேரர் , போர்க்காலத்தில் கூட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை சந்திப்பதற்காக ஆறு தடவை அப்போதைய அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அரசாங்கம் இதற்கு ஏற்பாடுகளை செய்யாத சூழலில் ஆறாவது தடவையாக தான் வவுனியா வரை பிரபாகரனை காண வேண்டும் என்று சென்றேன். ஆனால் அது கைகூடவில்லை எனக் கூறினார்.
போர்க்காலத்தில் ஒரு தீர்வைக் கொண்டு வர வேண்டும், சமாதானத்தை கொண்டு வர வேண்டும் என்ற விடயத்தில் ஈடுபட்டோம்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் கிளிநொச்சி, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் அஸ்கிரிய, மல்வத்துபீட தேரர்கள் பல பணிகளை செய்தமைக்கான புகைப்படங்களையும் காட்டினர்கள்”. என்றார்.