பிரித்தானிய ஆட்சியாளர்களால் தூக்கிலிடப்பட்ட இலங்கையர்: 110 ஆண்டுகளின் பின்னர் ஜனாதிபதி மன்னிப்பு
109 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய ஆட்சியாளர்களால் நியாயமற்ற முறையில் மரண தண்டனை வழங்கப்பட்ட எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் அவர்களுக்கு சுமார் 110 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (12) விசேட வர்த்தமானி அறிவித்தலில் அரசியலமைப்பின் 33(ஏ) சரத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த ஜனாதிபதி மன்னிப்பை அறிவித்துள்ளார்.
ஜூன் 25, 1915 அன்று அப்போதைய இலங்கையின் ஆளுநராக இருந்த ரொபர்ட் சால்மர்ஸ் வெளியிட்ட பிரகடனத்தின் மூலம் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தின் நியாயமற்ற விசாரணையின் பின்னர் அவர் ஜூலை 7, 1915 அன்று சட்டவிரோதமாக தூக்கிலிடப்பட்டார்.
இந்த வர்த்தமானி அறிவிப்பில் எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் என்பவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 16, 1888 இல் காலியில் பிறந்தஎட்வர்ட் ஹென்றி பேதிரிஸ், ஆங்கிலேயர் ஆட்சியின் போது இலங்கையில் வாழ்ந்த ஒரு முக்கிய சமூக ஆர்வலர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இலங்கை பாதுகாப்புப் படையிலும், கொழும்பிலும் பணியாற்றிய கெப்டன் பதவியில் இருந்த இராணுவ அதிகாரி என்றும் கூறப்படுகிறது.
1915ஆம் ஆண்டு இனவெறிக் கலவரத்தைத் தூண்டியதாக பிரித்தானிய அதிகாரிகள் குற்றம் சாட்டி அவரைக் தூக்கிலிட்டனர். எனினும், அந்தக் குற்றச்சாட்டு பின்னர் பொய் என நிரூபிக்கப்பட்டது.