Home » பெரும்பான்மைப் பலத்தால் தவறுகளை மூடி மறைத்தால் வன்முறை வெடிக்கும் – கம்மன்பில எச்சரிக்கை

பெரும்பான்மைப் பலத்தால் தவறுகளை மூடி மறைத்தால் வன்முறை வெடிக்கும் – கம்மன்பில எச்சரிக்கை

Source

“பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு தவறுகளை தொடர்ந்து மூடி மறைத்தால் மக்கள் வன்முறையை கையில் எடுப்பார்கள். ஆகவே, ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் தரப்பினர் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.”

  • இவ்வாறு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் எதிரணியின் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

“சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சிரேஷ்ட அரசியல்வாதி என்ற நன்மதிப்பை பெற்றிருந்தார். 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை தொடர்ந்து சபாநாயகர் பதவிக்கான தெரிவு இடம்பெற்ற போது எதிர்க்கட்சியினர் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தனவை நியமிக்க ஆதரவு வழங்கினார்கள். எதிர்க்கட்சியினர் வைத்த நம்பிக்கையை அவர் பாதுகாக்கவில்லை. இதனால் தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்துள்ளார்கள்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது ஆளும் தரப்பினர் ‘சபாநாயகர் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை மீறவில்லை, சபாநாயகர் சரி என்பதால் தான் உயர் நீதிமன்றம் எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரித்துள்ளது, இல்லாத பிரச்சினையை தோற்றுவிப்பதற்காகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது. எம்மிடம் பெரும்பான்மை உள்ளது.ஆகவே நாங்கள் சபாநாயகரை பாதுகாப்போம்’ என்று தன்னிச்சையாக குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது.

இணையவழி பாதுகாப்பு சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் குழுநிலை வேளையின் போது சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை. தவறுகளை எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினோம். ஆனால் அவர் அதனை பொருட்படுத்தவில்லை. இதன் பெறுபேறே இன்று நம்பிக்கையில்லா பிரேரணையாக வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது என்பதால் தான் எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம் இரத்துச் செய்தது. உலக நாடுகளில் சட்டம் ஒன்று இயற்றப்பட்டதன் பின்னர் அதன் அரசமைப்பு இயங்கு நிலை தொடர்பில் ஆராய நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. ஆனால் இலங்கையில் அந்த நிலைமை கிடையாது.

சபாநாயகர் பதவி வகிப்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு சுயாதீனமான முறையில் அரசமைப்புக்கு அமைய செயற்படுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அரசமைப்பின் 80 ஆவது உறுப்புரை நீக்கப்பட்டு அந்த அதிகாரம் சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை மாத்திரமல்ல, அரசமைப்பின் நம்பிக்கையையும் இல்லாதொழித்துள்ளார்.

பெரும்பான்மை எம்மிடம் உள்ளது என்று ஆளும் தரப்பு தன்னிச்சையாக செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவையும் அரசு பாதுகாத்தது. கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது நாடாளுமன்றத்தில் பல விடயங்கள் பேசப்பட்டன. மக்கள் அதனை உன்னிப்பாக ஆராய்ந்தார்கள்.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக அமைச்சரவை அமைச்சர் ஒருவரை கைது செய்யப் பொலிஸாருக்குத் தைரியம் வந்துள்ளது. நீதிமன்றம் சுயாதீனமாகச் செயற்பட்டு இன்று கெஹலிய ரம்புக்வெலவை சிறையில் அடைத்துள்ளது. ஆகவே, பெரும்பான்மை எப்போதும் வெற்றி பெறாது.

பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு தவறுகளைத் தொடர்ந்து மூடி மறைத்தால் மக்கள் வன்முறையைக் கையில் எடுப்பார்கள். ஆகவே, ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் தரப்பினர் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.” – என்றார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image