பொதுத் தேர்தல்: வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் வெளியிடப்படவுள்ளன.
2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை வெளியிடும் நடவடிக்கை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 690 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
இந்நிலையில், அடுத்த மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலை கண்காணிக்க எட்டு நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களும் பொதுத் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
அத்துடன், ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் கண்காணிப்பாளர்களும் பொதுத் தேர்தலை கண்காணிக்க இலங்கை வரவுள்ளதாக தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மட்டத்தில் அதிகளவான அரசியல்வாதிகள் பொதுத் தேர்தலில் போட்டியிடாத முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என பெஃபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
எனவே, இம்முறை பொதுத் தேர்தல் மிகவும் முக்கியமானது. பல தசாப்த காலமாக தேசிய மட்டத்தில் இருந்துவந்த சுமார் 20 அரசியல்வாதிகள் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்முறை 50ற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் தேர்தல் களத்திலிருந்து வெளியேறியுள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்கள், இளம் அரசியல்வாதிகள் மற்றும் சிரேஷ்ட அரசியல்வாதிகள் பெரும்பாலும் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை ஒருங்கிணைத்துள்ளார்கள்.