Home » மக்களுக்குத் தெரியாதவர்களே திசைகாட்டியில் வேட்பாளர்கள்- அநுரவைக் கலாய்த்த ரணில்

மக்களுக்குத் தெரியாதவர்களே திசைகாட்டியில் வேட்பாளர்கள்- அநுரவைக் கலாய்த்த ரணில்

Source

“திசைகாட்டியில் வாக்களிப்பது யாருக்கு? அவர்களின் வேட்பாளர்கள் யார்? என்று மக்களுக்குத் தெரியாது. அவ்வாறு இருக்கும்போது, அறிமுகம் இல்லாதவர்களுக்கு எப்படி வாக்களிப்பது? இதுவா ஜனநாயகம்?”

– இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கொட்டகலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

“இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் களமிறங்கி இருக்கும் வேட்பாளர்களின் முதலாவது கூட்டத்திலேயே நான் இன்று கலந்துகொண்டுள்ளேன்.  

எமது வேட்பாளர்கள் அதிகமான மாவட்டங்களில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டாலும் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்தார்.

1947 ஆம் ஆண்டில் இருந்து அனைத்து நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்ட ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் யானைக்கும்  இந்த பிரதேச மக்களுக்கும் இடையில் பாரிய தொடர்பு இருக்கின்றது.

இந்தப் பிரதேச மக்களுக்கு வாழ்வதற்கான வசதிகளை வழங்குவதுடன் 1986இல் சிறிமா – சாஸ்திரி மற்றும் சிறிமா – இந்திரா ஆகிய இரண்டு ஒப்பந்தங்களின் கீழ் இந்தியாவில் அல்லது இலங்கையில் பிரஜாவுரிமை கிடைக்காத அனைவருக்கும் நாங்கள் இலங்கைப் பிரஜாவுரிமையைப்  பெற்றுக்கொடுத்தோம்.

தொண்டமான் ஐயா எடுத்த இந்த நடவடிக்கையும் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன அதற்கு வழங்கிய ஒத்துழைப்புடன் நாங்கள் அனைவரும் அதற்குச் சம்மதம் வழங்கினோம்

ஐக்கிய தேசியக் கட்சி முன்வந்து பெருந்தோட்ட மக்களுக்கு அன்று பிரஜாவுரிமையை வழங்கும்போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ராேஹண விஜேவீர அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

அதற்காக மக்கள் விடுதலை முன்னணி இந்த மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என நான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தெரிவிக்கின்றேன்.

பெருந்தோட்ட மக்களுக்கு வாக்குரிமையை வழங்க வேண்டாம்  என மக்கள் விடுதலை முன்னணி அன்று  தெரிவித்தது. அப்படியென்றால் ஏன் அவர்களுக்கு இன்று நீங்கள் வாக்களிக்க வேண்டும் என மக்களிடம் கேட்கின்றேன்.

2001இல் ஆறுமுகன் தொண்டமான் எங்களுடன் இருக்கும்போது இந்தியப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டு இலங்கையில் இருந்தவர்கள் இருந்தார்கள்.

அவர்கள் இந்தியாவுக்குச் செல்ல முடியாது. இலங்கையில்தான் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது மீண்டும் ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்து அவர்களுக்கும் இலங்கைப் பிரஜாவுரிமையை வழங்கினோம். இவை அனைத்தும் யானையின் காலத்திலேயே வழங்கப்பட்டது.

கொட்டகலை எந்த அபிவிருத்தியும் இல்லாமல் இருந்தது. தற்போது தனியான பிரதேச சபை, பிரதேச செயலகம் எனப் பல அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன.

யானைக்கு வாக்களித்தால் அந்த அபிவிருத்திகள் கிடைக்கும். அதனால் இந்த முறை யானைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றவுடன் அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார். நாடாளுமன்றத்தைக்  கலைக்கும்போது ஏன் கலைக்கின்றோம், அவரின் வேலைத்திட்டம் என்ன என எதுவும் தெரிவிப்பதில்லை. ஆனால், என்னிடம் 16 குடைகள் இருப்பதாகவும் வேறு விடயங்கள் தொடர்பாகவும் தெரிவிக்கின்றார்.

அதேநேரம் ஊடகங்களை அவர் எச்சரிக்கின்றார். நாடாளுமன்றத்தைச்  சுத்தப்படுத்த வாக்களிக்குமாறு மாத்திரமே அவர் கேட்கின்றார்.

திசைகாட்டியில் வாக்களிப்பது யாருக்கு? அவர்களின் வேட்பாளர்கள் யார்? என்று மக்களுக்குத் தெரியாது. அவ்வாறு இருக்கும்போது, அறிமுகம் இல்லாதவர்களுக்கு எப்படி வாக்களிப்பது? இதுவா ஜனநாயகம்? எங்களது கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஏனைய கட்சிகளில் மக்களுக்கு அறிமுகமானவர்களே போட்டியிடுகின்றனர்.

அவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். திருடர்களைப் பிடிப்பதாக அநுரகுமார தெரிவிக்கின்றார். ஆனால், அதற்குத் தேவையான சட்டத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் அனுமதிக்கும்போது திசைகாட்டி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.

இந்தப் பிரதேசத்தில் அதிகமான மக்கள் வாழ்க்கையைக் கொண்டு செல்ல முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இவர்கள் ஆட்சிக்கு வந்து ஒரு மாத காலத்தில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவில் இருந்து ஆயிரத்து 350 ரூபா வரை அதிகரித்தோம். அவர்கள் 2ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதாகத்  தெரிவித்தார்கள். இப்போது 2ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு தெரிவிக்கின்றோம். அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம்.

அதேபோன்று பெருந்தோட்ட மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கு யாரிடமும் தீர்வு இருக்கவில்லை. ஜீவன் தொண்டமானுடன் நாங்கள் கலந்துரையாடி, அரசின் காணிகளை இவர்களுக்கு வழங்கி அவர்களுக்குத் தேவையான முறையில் வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள இடமளித்து, லயன் அறைகள் இருக்கும் இடங்கள் அனைத்தையும் கிராமங்களாக மாற்ற நடவடிக்கை எடுத்தோம். அதனால் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு நாங்களே தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தோம்.

பெருந்தோட்ட மக்களுக்குச் சம்பளத்தை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுத்தோம். அதேபோன்று அரச ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து, அதற்குக் குழுவொன்றை நியமித்தோம். குழுவின் பரிந்துரைக்கமைய இரண்டு கட்டங்களாக சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம். முதற்கட்டமாக அடுத்த வருட வரவு – செலவுத்  திட்டத்தில் அதிகரிப்பதற்குத் தீர்மானித்து அதற்கு அமைச்சரவையின் அனுமதியும் பெறப்பட்டது.

ஆனால், தற்போது அநுரகுமார திஸாநாயக்க அந்தச் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என்கிறார்.

நாடாளுமன்றத்துக்கு எங்களது உறுப்பினர்களை அதிகம் அனுப்பினால் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக நாடாளுமன்றத்தில் போராட நடவடிக்கை எடுப்போம்.

நாங்கள் 2028இல் மீளக் கடன் செலுத்த வேண்டி இருக்கின்றது. அதற்கு எமது தேசிய உற்பத்தியை நூற்றுக்கு 15 வீதமாக அதிகரித்துக்கொள்ள வேண்டும். தற்போது எமது தேசிய வருமானம் நூற்றுக்கு 12 வீதமாகவே இருக்கின்றது.

நாங்கள் உரிய காலத்தில் கடன் செலுத்த முடியாமல் போனால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும். இதுவே தற்போதுள்ள பிரச்சினை. இதற்குத் தீர்வு என்ன எனக் கேட்டால் ஜனாதிபதியிடம் பதில் இல்லை.  

இந்த நாட்டைப் பாதுகாக்கவோ பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவோ திசை காட்டியால் முடியாது. அவர்களுக்கு அதனைச் செய்யவும் தெரியாது.

அதனால் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க அது தொடர்பில் அறிந்தவர்கள் யானை சின்னத்திலும், சிலிண்டர் சின்னத்திலும் பாேட்டியிடுகின்றனர்.

அவர்களைத் தெரிவு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் முட்டை விலை ஆயிரம் ரூபாவுக்கும் அதிகரிக்கும்.” – என்றார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image