மக்களை பொருளாதார ரீதியில் உயர்த்துவதற்காக துறையொன்று உருவாக்கப்படும் – ஜனாதிபதி
அந்த மக்கள் துறையின் இயக்கியாக கூட்டுறவு இயக்கம் மாற்றப்படும். அந்த நோக்கத்திற்காக நாட்டில் சுதந்திரமான வலுவான கூட்டுறவு இயக்கம் கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு இயக்கத்தின் எதிர்காலம் குறித்து கொழும்பில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் உள்ள கூட்டுறவுச் சங்க வலையமைப்பின் தலைவர்கள், நிர்வாக சபை அதிகாரிகள் உட்பட பெருந்தொகையான பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். அப்போது நாட்டில் பலமான இயக்கமாக இருந்த கூட்டுறவு சங்கங்கள் 1970ஆம் ஆண்டு சீர்திருத்தத்தின் பின்னர் மாறியதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
கூட்டுறவுச் சட்டத்தை மாற்ற எவரும் செயல்படவில்லை. தற்போது கூட்டுறவு இயக்கம் அரசியல்மயமாகிவிட்டது. நாட்டின் வரிசை யுகத்தை நினைவுகூர வேண்டிய அவசியமில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, இதனால் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்கும் நாடுகளிடமிருந்து இலங்கை தற்போது நிவாரணம் பெற்றுவருகின்றது. அதன்மூலம் ஒப்பந்தங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அந்த உடன்படிக்கைகளை முறியடிப்பதன் மூலம், நாம் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல வேண்டி வரும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் நளின் பெர்னாண்டோ, 2 வருடங்களுக்கு முன்னர் தேர்தலைப் பற்றியோ அல்லது தமது எதிர்காலத்தைப் பற்றியோ மக்களால் சிந்திக்க முடியவில்லை என நினைவு கூர்ந்தார்.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றதன் பின்னர் இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.