மக்கள் மீதான சுமைகளை நீக்குவதற்கு மாற்றுத் திட்டங்கள் ஜனாதிபதி உறுதி
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பிராந்திய திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன், சிரேஷ்ட தூதுக்குழுவின் பிரதானி கலாநிதி பீற்றர் பிறேயர் ஆகியோர் தலைமையிலான நிதியத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு இடையில் தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் வேலைத்திட்டம் பற்றி இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் நோக்கை அடைவதற்கு, கொள்கை ரீதியில் அரசாங்கத்தின் உடன்பாட்டை ஜனாதிபதி இதன்போது உறுதிப்படுத்தினார்.
மக்கள் மீது விதிக்கப்படும் சுமையினை நீக்குவதற்கு, மாற்றுத் திட்டங்களின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிகரித்த வற் வரி மற்றும் வருமான வரியினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் இலக்கை நிறைவேற்றுவதற்கு தற்போதைய ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை பிரதிநிதிகள் பாராட்டினர்.
இலங்கை அரசாங்கம் முன்வைக்கும் மாற்று முறைமை பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அவர்கள் உடன்பாடு தெரிவித்தனர்.