முல்லைத்தீவு மீனவர் சமாசத்திற்கு வழங்கிய இந்திய ட்ரோளர் படகினை இனந்தெரியாதோர் தாக்கி மூழ்கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு அரச உடமையாக்கப்பட்ட இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான 50 அடி நீள இரும்பு ட்ரோளர் படகுகள் 3 வடக்கு மீனவ அமைப்புக்களிற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவால் வழங்கப்பட்டது.
இவ்வாறு வழங்கப்பட்ட 3 படகுகளில் ஒன்று முல்லைத்தீவு சமாசத் தலைவர் நாதனிடம் கையளிக்கப்பட்டது. இவ்வாறு கையளிக்கப்பட்ட படகு கடந்த 13 ஆம. திகதி மயிலிட்டித்துறைமுகத்தில் இருந்து முல்லைத்தீவிற்கு கொண்டு சென்று நங்கூரம் இடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு நிறுத்தி வைத்திருந்தி வைத்திருந்த படகினை இரவு 11 மணியளவில் இனம் தெரியாத சிலர் படகில் இருந்து நீர் வெளியேறும் பகுதியினை உடைத்து சேதப்படுத்தியதன் மூலம் படகிற்குள் நீர் உட்புகுந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த படகு நீரில் மூழ்குவதான தகவல் கடற்படையினருக்கு வழங்கப்பட்ட நிலையில் அதிகாலை 2 மணிமுதல் 5 மணிவரை கடற்படையினர் படகை மீட்க கடும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதும் படகு முழுமையாக நீரில் மூழ்கிவிட்டது.
இந்திய நாணயத்தில் 10 மில்லியன் ரூபா பெறுமதியிலான படகே முல்லைத்தீவில் மூழ்கியதாகவும் இதற்கு நாச வேலைகள் காரணமா என தீவிரமாக ஆராயப்படுகின்றது.
இதேநேரம் இப் படகினைப் பெற்றுக்கொண்ட முல்லைத்தீவு மீனவர் சமாசத் தலைவர் நாதனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,
மேற்படி தகவலை உறுதி செய்ததோடு பல மணிநேரம் நாமும் கடற்கடையும் போராடியும் படகை மீட்க முடியவில்லை. விசாரணைகள் இடம்பெறுகின்றன எனத் தெரிவித்தார்.