மேடைகளில் பேசும் தரப்புகள் பொருளாதார சவால்களுக்கு அஞ்சி நின்றதாக ஜனாதிபதி தெரிவிப்பு
ஒருவர் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு ஏற்படக்கூடிய பசிக்கு கட்சி இல்லையென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்து எதிர்கால சந்ததிக்காக வலுவான பொருளாதாரத்தை கொண்ட நாட்டை கட்டியெழுப்ப உதவி வழங்குமாறு ஜனாதிபதி இலங்கையின் பெண் சமுதாயத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெண்களாகிய எமது சக்தி என்ற பெயரில் கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற மகளிர் மாநாட்டில் இணைந்து உரையாற்றிய போது, அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
இன்று மூவேளை உணவை உண்ண முடியாமல் ஒருவேளை உணவை தவிர்த்து, பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாமல் பெற்றோர் அனுவிக்கும் வேதனையை யாரும் மறக்க முடியாது. மேடைகளில் தேசப்பற்று பற்றியும் மக்களின் துயரங்கள் பற்றியும் பேசிய அரசியல் தலைவர்கள் அன்று சவால்களுக்கு அஞ்சி ஒதுக்கியிருந்த விதத்தை நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கஷ்டமான பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியிலும் பெண்களின் உரிமைகளை வென்று கொடுப்பதற்காக தாம் ஒருபோதும் தாமதிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க குறிப்பிட்டார். பெண்களை வலுவூட்டல் தொடர்பான சட்டத்திற்கு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. ஆண், பெண் சமத்துவத்தை சாத்தியப்படுத்தும் பின்னணி ஏற்படுத்தல் அடங்கலாக பெண் உரிமைகளை, வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென அவர் கூறினார்.
இன்றைய மாநாட்டில் கட்சி பேதமின்றி நாடெங்கிலுமுள்ள மகளிர் அமைப்புகள் பிரதிநிதிகள் அடங்கலாக பெருமளவு பெண்கள் கலந்து கொண்டார்கள். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வளர்ச்சி நோக்கி நகரத்துவதற்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை தாம் முழுமையாக ஆதரிப்பதாக பெண் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்கள்.